search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் மாவட்டத்தில்  இரவில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு
    X

    கடலூரில் மாவட்டத்தில் இரவில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பாதிப்பு

    • மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது
    • பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.

    கடலூர், ஜூன்.19-

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி அக்னி நட்சத்திரம் முடிந்து 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலால் கடலூர் மாவட்டத்தில் மதிய வேலைகளில் அனல் காற்று வீசி வந்ததோடு இரவிலும் வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட்ட புழுக்கத்தால் வீட்டிற்குள் பொதுமக்கள் இருக்க முடியாத சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் மாலை நேரங்களில் குளிர்ந்த சூழ்நிலை நிலவி வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை 2- வது நாளாக நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்து இன்று காலை வரை பெய்தது. விடிய விடிய பெய்த மழையினால் கடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். மேலும் கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவ கிராம மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இந்த மழை கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காலை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் மழையில் குடை பிடித்தபடி சென்றனர்.

    இதேபோல் காட்டுமன்னார்கோவில் பகுதியிலும் நேற்று இரவு முதல் காலை வரையில் மழை நீடித்தது. இந்த மழை காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள லால்பேட்டை, மாகொள்ளங்குடி, எடையார், ஆயங்குடி, அனக்கரை, வாணாமதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. புவனகிரி பகுதிகளிலும் நேற்று முதல் மழை பெய்தது. புவனகிரி சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மேலும் புவனகிரி சுற்றி உள்ள விவசாய நிலத்திலும் தண்ணீர் வரத்து வர தொடங்கியது.

    இதேபோன்று மழையினால் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் கடந்த 7 மணி நேரமாக மின்தடையில் சிக்கி இருளில் மூழ்கிய கிராம மக்கள். மேலும் ராமநத்தம் சுற்றியுள்ள வாகையூர் பகுதியில் தொடர்ச்சியாக தினம் தோறும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து வருகிறது. இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வதால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரமம் அடைந்து வருகின்றனர்.கோடை வெயிலின் வெப்பத்தால் பொதுமக்கள் வாட்டி வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பொதுமக்கள் வெப்பத்திலிருந்து குளிர்ச்சியான சூழ்நிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மழை கடலூர் மாவட்டத்தில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.

    Next Story
    ×