என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மா விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
    X

    மா விளைச்சல் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்

    • வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளால் பயிர்கள், மனித உயிர்கள் சேதமும், யானைகளும் பாதிக்கப்படுகிறது.
    • வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான தண்ணீர், கரும்பு, ராகி, வாழை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாமரங்களில் வால்பேன் பூச்சி தாக்குதல், தென்னை ஒலையில் கருத்தலை நோய் தாக்குதல் தொடர்பாக விவசாயிகள் மாங்காய்கள், தென்னை ஒலையை கலெக்டரிடம் காட்டினார்கள்.

    தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மாவிவசாயம் இயற்கை இடர்பாடு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அழிந்து வருகிறது. குறிப்பாக பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த முடியவில்லை. தோட்டங்களில் ஆய்வு செய்த அலுவலர்கள் பரிந்துரை செய்யும் மருந்துகள் உள்ளூர் வேளாண் பொருட்கள் விற்பனை(அக்ரோ) கடைகளில் கிடைப்பதில்லை. இதனால் பூச்சி மருந்து கடைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளை தான் தெளிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த ஆண்டில் 100 சதவீதம் மாமரங்களில் பூக்கள் பூத்திருந்தது. தற்போது பூச்சி தாக்குதல் காரணமாக 85 சதவீதம் மேல் உதிர்ந்தும், நோய்கள் தாக்கி உள்ளது. மீதமுள்ள காய்களிலும் வால்பேன் பூச்சி தாக்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டிலும் மா விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு மாவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். முத்தரப்பு கூட்டம் நடத்தி மாவிற்கான கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.1 லட்சம் நிர்யணம் செய்ய வேண்டும்.

    மா மரங்களை தாக்கும் வால்பேன் பூச்சிகள் தக்காளி, கத்திரிக்காய், பூக்களையும் தாக்குகிறது. இதனால் மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வேளாண் பட்ஜெட்டில் மாவிவசாயம் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இல்லாமல் உள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

    தென்னையில் கருந்தலைப் புழுக்கள் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனை ஆரம்பகட்டத்தில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இட்டிக்கல்அகரம் ஊராட்சியில் புதிய ஏரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி அமைத்து கொடுத்தால் கிராம மக்கள் பங்களிப்புடன், தென்பெண்ணை ஆற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரலாம்.

    மயில்களால் நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர் சேதங்கள் அதிகளவில் ஏற்படுகிறது. இதற்கு உரிய இழப்பீட்டை வனத்துறையினர் பெற்று தர வேண்டும். கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் மின்தடை அதிகளவில் உள்ளதால், விவசாய பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளால் பயிர்கள், மனித உயிர்கள் சேதமும், யானைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே, வனப்பகுதியில் யானைகளுக்கு தேவையான தண்ணீர், கரும்பு, ராகி, வாழை உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்க வேண்டும்.

    இதன் மூலம் யானைகள் வெளியே வராமல் தடுக்க முடியும். தொரப்பள்ளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள கெலமங்கலம் ஏரிக்கு பம்பு செய்து கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் கெலமங்கலம் ஏரியில் இயற்கையாகவே அமைந்துள்ள நீர்செல்லும் கால்வாய்கள் மூலம் 40 ஏரிகள் பயன் பெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

    மா பாதிப்பு தொடர்பாக 7 நாட்களுக்குள் விவசாயிகள், மா ஆராய்ச்சி மைய வல்லுநர்கள், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். மா முத்தரப்பு கூட்டம் இம்மாத இறுதிக்குள் கூட்டப்படும். இட்டிக்கல்அகரத்தில் புதிய ஏரி அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும்.

    மயில் கூட்டங்கள் மூலம் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுதில்லை. இதுதொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க, வனத்துறை, மின்சாரம், வேளாண்த்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×