என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர், விழுப்புரம் உள்பட தமிழக பகுதிகளுக்கு புதுச்சேரியில் இருந்து கடத்தப்படும் கள்ளச்சாராயம்

    • புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் அரசு சாராய வடிசால் ஆலை உள்ளது.
    • வியாபார போட்டியால் சாராயத்தில் எத்தனால், போதை மாத்திரைகள் கலக்கப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ள சாராயம் குடித்த 13 பேரும், செங்கல்பட்டு அருகே தெருக்கரணையில் 5 பேரும் என 18 பேர் இறந்தனர்.

    கள்ளசாராயம் குடித்து 18 பேர் மரணம் அடைந்துள்ளது தமிழகத்தையே உலுக்கியுள்ளது. புதுவையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட சாராயத்தின் மூலமே இந்த மரணம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    புதுவையில் அரசே கள், சாராய கடைகளை பொது ஏலத்தில் நடத்துகிறது. கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலத்தில் இருந்து அரசு சான்றிதழுடன் எரிசாராயம் லாரிகளில் கொண்டு வரப்பட்டு புதுவை ஆரியப்பாளையத்தில் உள்ள சாராய ஆலையில் தரம் பரிசோதிக்கப்பட்டு அதில் தண்ணீர் சேர்க்கப்படுகிறது.

    பாட்டில்களில் நிரப்பப்படும் சாராயம் மூடியிட்டு அரசு முத்திரையிட்டு 180 மில்லி, 750 மில்லி மற்றும் 50 லிட்டர் என வியாபாரிகளுக்கு சாராயம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த சாராயத்தை கிஸ்தி வியாபாரிகள் புதுவையில் உள்ள சாராயக் கடைகளில் விற்பனை செய்கின்றனர்.

    புதுவை அரசு சாராயத்தை குடிக்க அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் புதுவை எல்லை பகுதி சாராய கடைகளுக்கு வந்து செல்வது வாடிக்கையாகும். வாடிக்கையாளர்களை கவர புதுவை சாராய கடை உரிமையாளர்கள் இலவச வாகன வசதி முதல் பல வசதிகளை செய்கின்றனர்.

    ஆட்டோக்கள் இலவசமாக இயக்கப்படுகிறது. கடலூர் ஆற்றில் தண்ணீர் அதிகம் வந்தால் சாராயக் கடைக்கு செல்பவர்களுக்கு இலவச படகு சவாரியும் உண்டு. தமிழக சாராயப் பிரியர்களை ஈர்க்கும் வகையில் புதுவை சாராயக் கடை உரிமையாளர்கள் பல்வேறு டெக்னிக்கான வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர்.

    இங்கு வந்து செல்ல முடியாத குடிமகன்களுக்காக சாராயம் கடத்தப்படுகிறது. புதுவை சாராய வியாபாரிகளிடம் சாராயத்தை வாங்கும் வியாபாரிகள் மாநில எல்லைகளில் மதுவிலக்கு சோதனை நடத்தும் போலீசாரின் கண்களில் மண்ணை தூவி கடத்துகின்றனர்.

    இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சாராயத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால், போதை மாத்திரைகளை அதிகளவில் கலந்து தண்ணீர் சேர்த்து விற்கின்றனர். இப்படி ஒரு சிலரின் சுய லாபத்துக்காக அதிக மெத்தனால் கலக்கப்பட்ட சாராயம்தான் 18 பேரின் உயிரை குடித்துள்ளது.

    50 லிட்டர் கேன்களில் புதுவை அரசு வழங்கும் சாராயத்தை 100, 200, 250 மில்லி என பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கின்றனர்.

    திருமணம், மஞ்சள் நீராட்டு, சாவு உள்ளிட்டவற்றுக்கு அண்டை மாநிலமான தமிழகத்தில் இருந்து மொத்தமாக சாராயம் பெறுவது வாடிக்கையாகும். இதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கேட்கும் அளவில் சாராயத்தை 5 லிட்டர், 10 லிட்டர் என கொடுப்பது வழக்கம்.

    இதனால் சாராயத்தை மொத்தமாக வாங்குவோர் பற்றிய விபரங்களை சேகரிப்பதில்லை. அதே நேரத்தில் தமிழக பகுதியில் சாராயம் விற்பனை இல்லாததால் தமிழக வியாபாரிகள் சாராயத்தை மொத்தமாக வாங்குவது இதுவரை வாடிக்கையாகவே இருந்துள்ளது.

    இதனால் தமிழக சாராய வியாபாரிகள் காய்கறி, பழம், மீன் கொண்டு செல்லும் மினி வேன்களில் அண்டை தமிழக மாவட்டங்களுக்கு கடத்துகின்றனர்.

    புதுவை மாநில எல்லைகளான கன்னிக்கோவில், கனகசெட்டிகுளம், மதகடிப்பட்டு, திருக்கனூர் பகுதிகளில் அதிக சாராயக்கடைகள் உள்ளது. தமிழகமும் புதுவையும் நில பரப்பில் பின்னி பிணைந்து உள்ளன. இதனால் கடத்தலை தடுக்க முடியாமல் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர்.

    புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையத்தில் அரசு சாராய வடிசால் ஆலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சாராயம் புதுச்சேரியில் 24 மணி நேரமும் இயங்கும் சாராயக்கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. மேலும் இங்கிருந்து புதுவை பிராந்திய பகுதியான காரைக்காலுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த இடைவெளியை பயன்படுத்தி சாராய மாபியாக்கள் புதுச்சேரியில் இருந்து சாராய பேரல்களை கைமாற்றுகிறார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    புதுச்சேரி தமிழக எல்லையில் உள்ள சாராயக்கடைகளுக்கு பேரல்களில் செல்லும் சாராயங்கள் பல ஆயிரம் லிட்டர் கணக்கில் தமிழகத்திற்கு கடத்தப்படுகிறது. புதுச்சேரி சாராயத்துடன் ஒருவகையான வேதிப்பொருளை கலந்து அதிக லிட்டர் சாராயம் தயாரித்து சாராயம் மாஃபியாக்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

    வியாபார போட்டியால் சாராயத்தில் எத்தனால், போதை மாத்திரைகள் கலக்கப்படுகிறது. இது அளவு மீறும்போது விஷ சாராயமாக மாறுகிறது. இதனாலேயே உயிர் இழப்பும் ஏற்படுகிறது. மரக்காணம் சம்பவத்தை தொடர்ந்து புதுவை கலால் துறையினர் எல்லைகளில் உள்ள சாராயக்கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். மொத்தமாக சாராயம் விற்கக்கூடாது என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×