என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராய விவகாரம்- 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைப்பு
    X

    கள்ளச்சாராய விவகாரம்- 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைப்பு

    • விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
    • மரக்காணம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இன்று பகல் 11 மணிவரை 9 பேர் பலியானதாக தெரிகிறது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது தொடர்பாக சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகியுள்ள 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    மேலும், விழுப்புரம் டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா மரக்காணத்தில் முகாமிட்டு இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் புதுவை மாநிலம் லிங்காரெட்டிபாளையம், காலாப்பட்டு, சந்தை புதுக்குப்பம் போன்ற பகுதிகளில் இயங்கும் சில கம்பெனிகளில் இருந்து மெத்தனாலை வாங்கி மரக்காணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனை அடுத்து 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளையும், சாராய வியாபாரிகளுக்கு எங்கிருந்து மெத்தனால் கிடைக்கிறது என்பன குறித்து விசாரித்து வருகின்றனர்.

    மரக்காணம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எக்கியார் குப்பத்தில் சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதால் அக்கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.

    Next Story
    ×