search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன் மலையடிவார பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தல்
    X

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலங்களில் செங்கல் சூளைகளுக்கு மண் திருடப்படுவது தொடர்பாக வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்த காட்சி.

    கல்வராயன் மலையடிவார பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தல்

    • புறம்போக்கு நிலங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மலை அடிவார பகுதியில் உள்ளது.
    • மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கல்வராயன் மலை தொடரில் மஞ்சவாடி முதல் அரூர் அருகே உள்ள பட்டவர்த்தி வரையில் உள்ள மலை அடிவாரப் பகுதிகளில், குறிப்பாக ஏ, பள்ளிப்பட்டி வருவாய் கிராமம், இருளப்பட்டி வருவாய் கிராமத்திற்கு சொந்தமான சாலூர், கல்லாத்துக்காடு, கோட்டை மேடு, பட்டுக்கோணம் பட்டி போன்ற பகுதிகளில் வருவாய் துறைக்கு சொந்தமான அரசு புறம்போக்கு நிலங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மலை அடிவார பகுதியில் உள்ளது.

    இந்தப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிலர் சட்டவிரோதமாக 5 முதல் 15 அடி ஆழத்திற்கு செம்மண்ணை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து டிராக்டர்கள், லாரிகள் மூலமாக எடுத்து சென்று செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், கல்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் செங்கல் சூளைகளுக்கு செம்மண் அரசு அனுமதி இல்லாமல் எடுத்துச் சென்று பயன்படுத்தி வந்தனர். இது குறித்து அரசு நிர்வாகத்திற்கு பலமுறை தெரிவித்து நடவடிக்கை இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

    இந்த குற்றச்சாட்டு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி கவனத்திற்கு சென்றது. அவர் நேரில் ஆய்வு செய்ய அப்பகுதிக்கு சென்றார்.

    அவர் இருளப்பட்டி ஏ.பள்ளிப்பட்டி வருவாய் கிராமத்தில் உள்ள சாலூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொண்டார். வருவாய் துறையினர் வருவதை கண்ட சமூக விரோத கும்பல் தங்கள் டிராக்டர், ஜே,சி.பி இயந்திரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.

    பின்பு வட்டாட்சியர் சுப்பிரமணி அங்கிருந்த செங்கல் சூளையில் கூலி வேலை செய்பவர்களிடம் விசாரித்தார்.சட்டவிரோதமாக மண் கடத்தி எடுத்து வரப்பட்டு செங்கல் சூளைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சட்டவிரோதம்.

    வருவாய் துறைக்கு தெரியாமல் சட்ட விரோதமாக இவ்வாறு செயல்பட்டு வருவதால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உரிய ஆவணங்கள் இருப்ப வர்களும், இந்த தொழிலில் ஈடுபடுபவர்களும் அரசின் கவனத்திற்கு தாங்களாகவே வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். இச்சம்ப வத்தின் போது இருளப்பட்டி, ஏ பள்ளிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரிகளும், வருவாய்த்துறை ஆய்வாள ர்களும் உடன் இருந்தனர்.

    Next Story
    ×