என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கே.ஏ. மனோகரன் படம்.
ஓசூர் மாநகராட்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.மனோகரன் கோரிக்கை
- இன்று, ஆசியாவிலேயே வளர்ந்துவரும் முக்கிய பகுதியாக ஓசூர், விளங்கி வருகிறது.
- பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கான கட்டமைப்பு இல்லாத நிலைதான் இருந்து வருகிறது.
ஓசூர்,
ஐ.என்.டி.யு.சி தேசிய செயலாளரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: "ஓசூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, அதற்கான செயல்பாடுகளை காண முடியவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள மேயர் மற்றும் கவுன்சிலர்கள் எந்த பணியையும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இன்று, ஆசியாவிலேயே வளர்ந்துவரும் முக்கிய பகுதியாக ஓசூர், விளங்கி வருகிறது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ஆனால், சுகாதாரம், குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகள் நிறைவேற்றப்படாமலும், பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கான கட்டமைப்பு இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. அந்த அரசும், இந்த அரசும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதாகவே நான் கருதுகிறேன்.
இன்று, தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் வரக்கூடிய பகுதியாக, ஓசூர் விளங்கிவரும் நிலையில், அதில் 10 சதவீத நிதியையாவது ஒதுக்கி, பணிகளை மேற்கொண்ருந்தால், ஓசூர் பொலிவு பெற்றிருக்கும். ஆனால், என்ன காரணத்தினாலோ, ஓசூர் ஒதுக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருவது,, மிகவும் வருத்தமளிக்கிறது. ஓசூர் நகரம் சீரமைக்கப்பட வேண்டும் எனில், மாநகராட்சி நிர்வாகம் நல்லமுறையில் இயங்கவும், வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றவும், ஒரு திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை, நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
அப்போது, ஐ.என்.டி.யு.சி மாவட்ட செயலாளர் முனிராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.






