என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனைவியின் உறவினர்கள் தாக்கியதால் மனம் உடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
- ஆண் நண்பருடன் மனைவி பேசியதை கண்டித்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது
- மணிகண்டனின் தாய் பிரியா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி,பேட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). இவர் இதே பகுதியைச் சேர்ந்த கங்கை அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சபி (வயது20) என்ற பெண்ணை காதலித்து மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சபி இப்பகுதியில் உள்ள அரச மரம் அருகே நின்று கொண்டு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். இதனை அறிந்த மணிகண்டன் தனது மனைவி சபியின் இச்செயலை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சபி தனது உறவினர்களுக்கு போன் செய்து மணிகண்டன் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் இதை உடனடியாக வந்து கண்டிக்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சபியின் உறவினர்கள், மணிகண்டனை சரமாரியாக தாக்கினார்களாம். இதனால் அவமானம் அடைந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து மணிகண்டனின் தாய் பிரியா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இப்பிரச்சினை இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






