என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் தனியார் நிறுவன ஊழியர் மனைவியுடன் தற்கொலை -உருக்கமான கடிதம்
- ஒரு விஷபாட்டில், 2 டம்ளர்களும் இருந்தன. 2 பேரும் தண்ணீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
- மகனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என முடிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து உள்ளார்கள்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 57). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி கலைவாணி (42). இவர்களது மகள் சரண்யா (23), மகன் பிருத்வி (21).
இவர்களில் சரண்யாவிற்கு திருமணமாகிவிட்டது. மகன் பிருத்வி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மகன் பிருத்வியுடன் மாதேஸ்வரன், கலைவாணி சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர்கள் எழுந்து வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பிருத்வி அறைக்கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் மாதேஸ்வ ரனும்,கலைவாணியும் கதவை திறக்க வில்லை. இதனால் அவர் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது மாதேஸ்வரன், கலைவாணி ஆகிய 2 பேரும் இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் ஒரு விஷபாட்டில், 2 டம்ளர்களும் இருந்தன. 2 பேரும் தண்ணீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களின் அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது மாதேஸ்வரன் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது.
அந்த கடிதத்தில் தனது மனைவிக்கு உடல் நல பாதிப்பு இருப்பதாகவும், தனது மகனுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், மாதேஸ்வரன் தனது பிள்ளைகளுக்கு தேவையான பண உதவிகளை செய்து கொடுத்து அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர எண்ணினார். ஆனால் அவ்வாறு முடியவில்லை.
மேலும் கலைவாணியின் வழியில் அவர்களுக்கு வர வேண்டிய சொத்து கிடைப்பதிலும் தாமதமாகி கொண்டு போனது. இதைத்தவிர கலைவாணிக்கும் உடல் நலம் பாதிப்பு இருந்தது. இதனால் மகனுக்கு பாரமாக இருக்க வேண்டாம் என முடிவு செய்து அவர்கள் தற்கொலை செய்து உள்ளார்கள்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.






