என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு
- இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
- பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
ஓசூர்,
ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் பயன்பட்டியல் துறை சார்பில், வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவும், தரவு அறிவியலும் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. முன்னதாக கணினி அறிவியல்துறை தலைவர் சாந்தி ஜெஸ்லெட் வரவேற்றார்.
எம்.ஜி.ஆர். கல்லூரி முதல்வர் முத்துமணி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசுகையில், கணினி தொழில்நுட்பம், எல்லா துறை மாணவர்களுக்கும் அடிப்படையானது, அத்தியாவசியமானது என்றும், அதனை, மற்ற துறை மாணவர்களும் பயன்படுத்தி தங்கள் துறை ஆராய்ச்சிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
முன்னாள் துணை வேந்தரும், அதியமான் கல்வி குழும ஆலோசகருமான முத்துச்செழியன் கணினி செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தரவு தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி எட்டியுள்ளது. இந்த தொழில் நுட்பமானது, மனிதர்களுக்கு ஏழாம் அறிவாக செயல்படுகிறது. எனவே மாணவர்கள் இந்தத் தொழில் நுட்பங்களை பயின்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கருத்தரங்கில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர்ஒவ்வொரு துறை மாணவர்களுக்கும் கட்டாயம் கணினிப் பாடம் வைக்கவேண்டும்.
மேலும், கணினித் துறையில் பல பிரிவுகள் பிரித்து இன்றைய தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்களின் நுண்ணறிவை பெருக்கிக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தவேண்டும் என்றார்.
இதில், பாரதிதாசன் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் ஜார்ஜ் தர்மபிரகாஷ்ராஜ் உள்பட பலர் பேசினர்.கருத்தரங்கில், தமிழகம், பெங்களூரூவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்களும், ஆய்வறிஞர்களும் கலந்து கொண்டனர்.
முடிவில் கணினி பயன்பாட்டியல் துறை பேராசிரியர் சிவராமன் நன்றி கூறினார்.






