search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர்கல்விக்கு ஏங்கும் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள்
    X

    உயர்கல்விக்கு ஏங்கும் மலைவாழ் பழங்குடியின மாணவர்கள்

    • 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
    • 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி,

    1980-ல் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

    தோல்தூக்கி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், இந்திரா நகர், கீரைப்பட்டி புதூர், கீரைப்பட்டி, கௌப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, செல்வசமுத்திரம், குடுமியாம்பட்டி, ஒடசல்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் இப் பள்ளியில் படிக்கின்றனர்.

    இங்கு படிக்கும் மாணவர்களில் 200 பேர் மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி) சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு பொது தேர்வில் ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சிப் பெறும் பள்ளியாகும். அரூர் வட்டாரப் பகுதியில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கும் பள்ளியாக உள்ளது.

    இந்தப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 17 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பிட கட்டடங்கள், விளையாட்டு மைதானம், சுற்றுச் சுவர், குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

    இந்த மையத்தில் சித்தேரி அரசு மலைவாழ் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கீரைப்பட்டி, கெளாப்பாறை மற்றும் எல்லப்புடையாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இந்த மையத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர்.

    அரூரில் இருந்து சித்தேரி மலை கிராமம் 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சித்தேரி மற்றும் அரூரில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதைத்தவிர, இந்த 26 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடைப்பட்ட கிராமங்களில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் ஏதுமில்லை.

    கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அனைத்து தகுதிகள் இருந்தும், நிதியுதவி இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இப் பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை என அப் பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

    தோல்தூக்கி, வள்ளிமதுரை, வாழைத்தோட்டம், இந்திரா நகர், கீரைப்பட்டி புதூர் ஆகிய கிராமங்களில் இருளர் மற்றும் மலைவாழ் பழங்குடியின (எஸ்.டி) பட்டியல் இனத்தை சேர்ந்த மாணவிகள் அதிகம் பேர் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.

    இந்தப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு நிறைவு செய்யும் மாணவிகள் பலர், மேல்நிலைப் பள்ளியில் சேராமல் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதால் பழங்குடியின சிறுமிகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்யும் நிலையுள்ளது.

    அரூர் கல்வி மாவட்டம், கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த தமிழக அரசுக்கு வைப்புத் தொகையாக ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும். கீரைப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களால் ரூ. 2 லட்சம் நிதியை திரட்டி, தமிழக அரசுக்கு செலுத்த முடியாத சூழ்நிலையுள்ளது. உயர்கல்வி கிடைக்காத நிலையில், பழங்குடியின மாணவிகளுக்கு இளம் வயதில் திருமணம் செய்கின்றனர்.

    கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ரூ. 2 லட்சம் நிதியினை செலுத்த முடியாத நிலை இருப்பதாக அரூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். எனவே, தமிழக அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்து, பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×