என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
    X

    நீலகிரியில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    • ஊட்டியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
    • கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

    ஊட்டி:

    தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.

    இதையடுத்து அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீலகிரி மாவட்டத்திற்கு வந்தனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டியில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டி, காந்தல், சேரிங்கிராஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழை காரணமாக ஊட்டி சேரிங்கிராஸ் சாலை, காந்தல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, தாவரவியல் பூங்கா சாலை, குன்னூர் சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர். சிலர் மழைக்கு பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஒதுங்கினர். சிலர் நனைந்தபடியே சென்றனர். காலையில் இருந்து பெய்து வரும் மழையால் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். தேயிலை தோட்டங்களில் பணிபுரிந்தவர்கள் பிளாஸ்டிக் கவர் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

    காந்தல் பகுதிக்கு செல்லும் சாலை, மார்க்கெட் பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தொடர் மழையால், மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிப்படைந்தனர். பொருட்களும் தண்ணீரில் நனைந்தன.

    கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழைக்கு கோத்தகிரி-ஊட்டி சாலையில் வெஸ்ட்பூரூக் பகுதியில் சாலையோரம் நின்றிருந்த ராட்சத கற்பூர மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் கருப்புசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர் ராட்சத கற்பூர மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். குன்னூர், கூடலூர், பந்தலூர் என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×