என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள், ஆடைகளை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல்லில் குவியல் குவியலாக கிடக்கும் துணிகளை அகற்ற வேண்டும்
- காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக மக்கிய நிலையில் கிடக்கிறது.
- காவிரி ஆற்றில் தூக்கி எறியப்படும் துணி வகைகளை குவியல்களை கட்டுப்படுத்த நிரந்தர வழிமுறைகள் ஏதும் ஏற்படுத்தவில்லை.
ஒகேனக்கல்,
தமிழகத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒகேனக்கல் பகுதிக்கு வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான முதலைப் பண்ணை, நாகர்கோவில், பெங்களூர் ஜால், மாமரத்துக்கடவு பிரதான அருவி செல்லும் நடைபாதை, பெண்கள் குளிக்கும் அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்துவிட்டு தாங்கள் பயன்படுத்திய ஆடைகளை அப்படியே காவிரி ஆற்றில் கழற்றி விடுகின்றனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்படும் ஆடைகள் பாறை திட்டுக்கள், கரையோரப் பகுதியில் உள்ள மரங்களின் வேர்கள் ஆகியவற்றால் தடுத்து நிறுத்தப்பட்டு காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குவியல் குவியலாக மக்கிய நிலையில் கிடக்கிறது.
தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளால் தூக்கி எறியப்பட்ட துணிகள் ஆங்காங்கே காணப்படுவதோடு மட்டுமல்லாமல் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்கச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மேலும் காவிரி கரையோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளால் தூக்கி எறியப்படும் துணிகள் போட தொட்டிகள், விழிப்புணர்வு பலகைகள் அமைக்கப்படாததால் காவிரி ஆற்றில் சுகாதார சீர்கேடு நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும் தனியார் அமைப்புகள் தன்னார்வலர்கள் மற்றும் மாணவர் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரையோரப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களால் தூக்கி எறியப்படும் துணிகளை ஆண்டுக்கு ஒரு முறை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பல ஆயிரம் டன் துணி வகைகள் அகற்றப்பட்டது.
ஆனால் காவிரி ஆற்றில் தூக்கி எறியப்படும் துணி வகைகளை குவியல்களை கட்டுப்படுத்த நிரந்தர வழிமுறைகள் ஏதும் ஏற்படுத்தவில்லை. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஆங்காங்கே குவியல் குவியலாக கிடக்கும் துணிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






