என் மலர்
உள்ளூர் செய்திகள்

போகிபுரம் கிராமத்தில் ஆபத்தான முறையில் பரிசல் மூலம் பயணம் செய்யும் பெண்கள்.
பாதியில் நிறுத்தப்பட்ட பாலப்பணி- மக்கள் அவதி
- பெய்த கனமழை காரணமாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வரத்தால் ஒப்பந்ததாரர்கள் பணிகளை நிறுத்திவிட்டு சென்றனர்.
- காங்கீரிட் கம்பிகள் முற்றிலும் துரு பிடித்து கிடப்பில் கிடக்கிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள போகிபுரம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமமானது தீவு போல் அமைந்துள்ளதால் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலை, அலுவலகங்கள் போன்ற எந்த வசதியும் இல்லை. இதனால் இக்கிராம மக்கள் வெளியூர் செல்ல வேண்டி உள்ளது.
இதற்காக சின்னார் அணை செல்லும் வாய்க்காலை அரை கிலோமீட்டர் தண்ணீரில் பரிசல் மூலம் கடந்து செல்ல வேண்டும். இது மட்டுமில்லாமல் விவசாய பொருட்களை சந்தைக்கு பரிசல் மூலம் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் நிலை உள்ளது.
இதனையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கடந்த ஆட்சியில் போகிபுரம் முதல் காமநாயக்கன பேட்டை வரையிலான பாலம் கட்ட சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் 2020-2021 ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு காங்கீரிட் தூண்கள் கட்டப்பட்டன.
இந்நிலையில் பெய்த கனமழை காரணமாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீர் வரத்தால் ஒப்பந்ததாரர்கள் பணிகளை நிறுத்திவிட்டு சென்றனர்.
இதனையடுத்து காங்கீரிட் கம்பிகள் முற்றிலும் துரு பிடித்து கிடப்பில் கிடக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பரிசலில் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கிடப்பில் ேபாடப்பட்ட பாலத்தை கட்டித்தர கோரிக்கை விடுக்கின்றனர்.






