search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா - 61ஆயிரம் பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு
    X

    மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா - 61ஆயிரம் பேருக்கு வேலை வழங்க ஏற்பாடு

    • குடிநீர், கழிப்பிடம், உணவுக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளன.
    • வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு அறை எண், நிறுவனத்தின் பெயர் அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா நாளை 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    முகாமுக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்குகிறார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    550 தலைசிறந்த சிறு, குறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில் 61,255 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. முகாம் நடைபெறும் இடத்தில் வேலைதேடுபவர்கள் தங்கு தடையின்றி தனியார் நிறுவனங்களை சந்திக்கும் வகையில் விசாலமான இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்த பின் வழங்கப்படும் அடையாள அட்டையை கொண்டு வேலைதேடுபவர்கள், நிறுவனங்களை சந்திக்கலாம். வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு அறை எண், நிறுவனத்தின் பெயர் அமைக்கப்படுகிறது.

    மகளிர் திட்டம் சார்பில் 650 பேர், காவல்துறை சார்பில் 300 பேர், போக்குவரத்து காவல்துறை சார்பில் 50 பேர், சுகாதாரத்துறை சார்பில் 30 டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்கிறார்கள். கோவை, நீலகிரி, சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்புத்துறை அலுவலர்கள் 70 பேர், 12 தீயணைப்புத்துறை அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள், 500 மாநகராட்சியை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் என 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்ற உள்ளனர்.

    தேவையான குடிநீர், கழிப்பிடம், உணவுக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளன. முகாமுக்கு வேலை தேடி வருபவர்கள் அனைவருக்கும் தனியார் நிறுவனங்களின் தகவல் கையேடு வழங்கப்படும். வேலைவாய்ப்பு திருவிழாவில் இளைஞர்கள் பங்கேற்று சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம் என்று மாநகராட்சி ஆணையாளர் பவன்கமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×