என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான நிதி நிறுவன அதிபரிடம்  இருந்துரூ.3 கோடி சொத்துக்கள் பறிமுதல்
    X

    கைதான நிதி நிறுவன அதிபரிடம் இருந்துரூ.3 கோடி சொத்துக்கள் பறிமுதல்

    • ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் வீடு, காலி மனைகள் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.
    • ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    பொதுமக்களிடம் சுருட்டிய பணத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூருவில் மனைகள் மற்றும் வீடுகளை அருண்குமார் வாங்கியது விசாரணையில் தெரிய வந்த நிலையில், அவரிடம் இருந்து ரூ.3 கோடி சொத்துக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அங்கம்பட்டி அருகே உள்ள வசந்தம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் ஏ.கே.டிரேடர்ஸ் நடத்தி வந்த அருண்குமார் என்பவர் நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபர்களின் பணத்தை ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.

    அது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் விசாரணை நடத்தப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் சங்கர், சீனிவாசன், பிரகாஷ், ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கில் தலைமறைவாக இருந்த முதல் குற்றவாளியான அருண்குமார், வேப்பனப்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்வதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மேற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், தருமபுரி இன்ஸ்பெக்டர் கற்பகம், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் (பொறுப்ப) மஞ்சுளா மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    வேப்பனப்பள்ளி சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த அருண்குமார் பாகலூர் அருகே கைது செய்யப்பட்டார்.

    விசாரணையில் அருண்குமார் தனது பெயரிலும், மனைவி சந்திரா பெயரிலும், கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களில் வீடு, காலி மனைகள் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அருண்குமார் காரில் வைத்திருந்த ரூ.16 லட்சம், ரூ.25 லட்சம் மதிப்புள்ள கார், செல்போன், 7 பவுன் தங்க காப்பு, மூன்றரை பவுன் சங்கிலி மற்றும் அசையும் சொத்துக்கள் ரூ.45 லட்சத்து 65 ஆயிரமும், அசையா சொத்துக்கள் ரூ.2 கோடியே 56 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 65 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீஸ் விசாரணைக்கு பிறகு அருண்குமார், கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் சிறப்பு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×