என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்மா பூங்கா அருகே கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளை படத்தில் காணலாம்.
ஏரியூரில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்
- பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சீர்கேடு ஏற்படுத்தி உள்ளனர்.
- இந்த இறைச்சி கழிவுகளை, தெரு நாய்கள் ஆங்காங்கே இழுத்துக் கொண்டு செல்வதன் காரணமாக, சாலையோரம் எங்கும் இறைச்சி கழிவுகள் சிதறி கிடக்கிறது.
ஏரியூர்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் நாகமரை பிரதான சாலையில், ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் அம்மா பூங்கா அமைந்துள்ள பகுதியில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டுகின்றனர்.
இந்த வழியாக பெள்ளூர், காமராஜ பேட்டை, நெருப்பூர், நாகமரை, ஒட்டனூர் உள்ளிட்ட ஊர்களுக்கான பொதுமக்கள் இந்த பாதையை கடந்து தான் செல்கின்றனர்.
மேலும் அருகிலேயே அரசு நடுநிலைப் பள்ளியும் தனியார் கல்லூரியும் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி சீர்கேடு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த இறைச்சி கழிவுகள் காரணமாக, இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையை கடக்கும் பொது மக்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் இந்த இறைச்சி கழிவுகளை, தெரு நாய்கள் ஆங்காங்கே இழுத்துக் கொண்டு செல்வதன் காரணமாக, சாலையோரம் எங்கும் இறைச்சி கழிவுகள் சிதறி கிடக்கிறது.
இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






