என் மலர்
உள்ளூர் செய்திகள்

5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்- சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் நியமனம்
- சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- ‘சைபர் கிரைம்’ டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அமரேஷ் புஜாரி சிறைத்துறை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக காவல்துறையில் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த சுனில்குமார் சிங், சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ஷகீல் அக்தர் ஆகியோர் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு வழி அனுப்பு விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அவர்கள் 2 பேரும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு நினைவு பரிசுகளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்கினார்.
இந்த விழாவில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுனில்குமார் சிங், ஷகீல் அக்தர் ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர்களுக்கு பதிலாக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதையொட்டி 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணியிட மாற்ற அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
இதன்படி சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த இந்த பதவி தற்போது கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு பணியிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
'சைபர் கிரைம்' டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த அமரேஷ் புஜாரி சிறைத்துறை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். அமரேஷ் புஜாரிக்கு பதிலாக சைபர் கிரைம் பிரிவுக்கு கூடுதல் டி.ஜி.பி.யாக சஞ்சய்குமார் பதவியேற்க உள்ளார். டி.ஜி.பி. அந்தஸ்தில் இருந்த இந்த பதவியும் கூடுதல் டி.ஜி.பி அந்தஸ்தாக குறைக்கப்பட்டுள்ளது.
சஞ்சய்குமார் பதவி வகித்த நவீனமயமாக்கல் பிரிவை சென்னை தலைமையக கூடுதல் டி.ஜி.பி. வெங்கட்ராமன் கூடுதலாக கவனிப்பார். சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி. ராதிகா ஆயுதப்படை ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.






