search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- தூத்துக்குடியில் 61 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
    X

    மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிகிறது- தூத்துக்குடியில் 61 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

    • தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தூத்துக்குடி:

    இந்தியாவில் கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலங்களில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறும்.

    இந்த காலங்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டு படகு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே சென்று மீன் பிடிப்பதால் அவர்களுக்கு இந்த தடைகாலம் பொருந்தாது. வழக்கம் போல் அவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவார்கள்.

    தடை காலத்தையொட்டி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோ நகர், தெர்மல் நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரியதாழை உள்பட மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் சுமார் 10 ஆயிரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.

    மீன்பிடி தடை காரணமாக அனைத்து விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மட்டும் 240 விசைப்படகுகள் உள்ளன.

    தடை காலத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் பணியிலும், தேசம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியிலும் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் 61 நாட்கள் தடைகாலம் நாளையுடன் முடிவடைகிறது. நாளை நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க புறப்பட்டு செல்ல இருக்கின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலுக்கு செல்ல தேவையான டீசல், ஜஸ் உள்ளிட்ட பொருட்களை படகுகளில் ஏற்ற தயாராகி வருகின்றனர்.

    Next Story
    ×