என் மலர்
உள்ளூர் செய்திகள்

விதிமுறைகளை மீறி இயங்கும் பட்டாசு கடைகள்
- தண்ணீர், மண் நிரப்பப்பட்ட வாளிகள் வைக்க வேண்டும்.
- 46 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி பட்டாசு குடோனில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 9 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகள், குடோன்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது கெலமங்கலம் அருகே ஒரு குடோனில் சோதனை செய்த போது பட்டாசுகள்வெ டித்து சிதறியது. இதில் ஒருவர் பலியானார். அதிகாரிகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக பட்டாசு கடைகள், குடோன்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. அதில் 46 கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 14 பேர் பலியானார்கள். இவர்கள் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளகுறிச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பெங்களூரு நகருக்குள் பட்டாசு கடைகளுக்கு அனுமதி இல்லாததால் பெரும்பாலானவர்கள் பட்டாசுகள் வாங்க, கர்நாடக எல்லையான ஓசூர் அத்திப்பள்ளி பகுதிக்கு வருவார்கள்.
தற்போது அத்திப்பள்ளி–யில் பட்டாசு கடையில் பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் இந்த முறை பட்டாசு கடைகள் அமைக்க அதிகாரிகள் கடும் விதிமுறைகளை வகுத்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும், பல இடங்களில் பட்டாசு கடைகள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமலும், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமலும் இயங்கி வருவதாக பொது மக்கள் தரப்பில் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பட்டாசு கடைகளில் தீயணைப்பு கருவிகள், தண்ணீர், மண் நிரப்பப்பட்ட வாளிகள் வைக்க வேண்டும். கடையில் அவசர கால வழிகள் இருக்க வேண்டும் என்பது உள்பட பல விதிமுறைகள் உள்ளன. இதில் பல பின்பற்றப்படாமல் பல பட்டாசு கடைகள் உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
எனவே இந்த முறை நகருக்குள் பட்டாசு கடைகளுக்கு அனுமதிக்க கூடாது என்றும், நகருக்கு வெளியே இடங்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும் என்றும், இந்த பட்டாசு கடைகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






