search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேகமாக பரவும் காய்ச்சல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டு - 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு
    X

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    வேகமாக பரவும் காய்ச்சல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனி வார்டு - 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு

    • திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மலேரியா, டெங்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அதனால் உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.

    எனவே டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வார்டுகளில் ஒவ்வொரு படுக்கைக்கும் கொசு வலை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்வப்போது நோயாளிகளுக்கு வெந்நீர், நிலவேம்பு கஷாயம் மற்றும் ஓ.ஆர்.எஸ்.கரைசல் வழங்கப்படுகிறது.

    திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு பகுதிகளில் தற்காலிக காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 30பேர் காய்ச்சலுக்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து மருத்துவ கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கூறுகையில், தற்போது டெங்கு பாதிப்பு இல்லை. காய்ச்சலுடன் வருபவர்களுக்கு சிறப்பு வார்டில் அனுமதித்து 5 நாட்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு ரத்தத் தட்டுகள் (பிளேட்லெட்) எண்ணிக்கை குறையும். அதனால் காய்ச்சல் பாதித்தோருக்கு தினமும் ரத்தத் தட்டுகள் எண்ணிக்கையை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரத்த தட்டுகளின் எண்ணிக்கையை பொருத்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் காய்ச்சல் பிரிவு செயல்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பருக வேண்டும். சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காதவாறு கவனித்து கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் தகுந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×