search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதிய விலை கிடைக்காததால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ள விவசாயிகள்
    X

    ராமலிங்கம்பட்டியில் செழித்து வளர்ந்துள்ள கோழிக்கொண்டை பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே உள்ளது.

    போதிய விலை கிடைக்காததால் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ள விவசாயிகள்

    • புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.
    • பூக்கள் பறிப்பு கூலிக்கே கட்டுப்படியாகவில்லை. இதனால் செண்டு மல்லி, கோழிக்கொண்டை பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பூட்டு, பிரியாணிக்கு மட்டுமின்றி பூக்களுக்கும் பெயர்போனது. நிலக்கோட்டை, செம்பட்டி, வெள்ளோடு, மைலாப்பூர், ரெட்டியார் சத்திரம், ஜம்புலியம்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கள் அதிகளவு பயிரிடப்படுகிறது.

    பெண்கள் பயன்படுத்தும் மல்லிகை, முல்லை, ஜாதி பூ, காக்கரட்டான் ஆகியவையும், மாலைக்கு பயன்படுத்தும் கோழிக்கொண்டை, சம்பங்கி, ரோஸ், வாடா மல்லி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களும் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து கேரளா, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு குறைந்தது 10 டன் பூக்களும் விஷேச தினங்களில் 30 டன் பூக்கள் வரையும் வரத்து உள்ளது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் மற்றும் விஷேச தினங்கள் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. இதனால் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டும் கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் கோழிக்கொண்டை கிலோ ரூ.15க்கும், சம்மங்கி ரூ.20, வாடா மல்லி ரூ.25, செண்டு மல்லி ரூ.15, ரோஸ் ரூ.40, வாடா மல்லி ரூ.25க்கும் விலை போனது. அதேபோல் முல்லை ரூ.100, ஜாதி பூ ரூ.250, காக்கரட்டான் ரூ.250க்கும் விற்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பரவலாக பருவமழை பெய்து வருவதால் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.800க்கு விற்கப்படுகிறது.

    இது குறித்து விவசாயி சுப்புராஜ் கூறுகையில், மாலைக்கு பயன்படுத்தும் பூக்கள் திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் அதிகளவு பயிரிடப்படுகிறது. தற்போது புரட்டாசி மாதம் காரணமாக விஷேச தினங்கள் குறைவு காரணமாகவும் இந்த பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. பூக்கள் பறிப்பு கூலிக்கே கட்டுப்படியாகவில்லை. இதனால் செண்டு மல்லி, கோழிக்கொண்டை பூ பயிரிட்ட விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். அடுத்து மஹாளய அமாவாசையை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×