என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகளை கண்காணிக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை
    X

    யானைகள் நாசம் செய்த தக்காளி செடியை படத்தில் காணலாம்.

    தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகளை கண்காணிக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

    • தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 4 யானைகள் லிங்கதீரனப்பள்ளி பகுதியில் உள்ள விளை நிலத்தில் புகுந்து தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின.
    • வனத்தை விட்டு வெளியேறும் யானைகளைக் கண்காணிக்க வேண்டும் என தேன்கனிக் கோட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கர்நாடக மாநிலம் பன்னர் கட்டா உயிரியல் பூங்காவில் இருந்து ஆண்டு தோறும் 200-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை, தளி, உரிகம், அஞ்செட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்குச் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வலசை வரும். இந்த யானைகள் தொடர்ந்து 6 மாதங்கள் தமிழக வனப்பகுதியில் சுற்றித் திரியும். இந்நிலையில், கடந்தாண்டு வலசை வந்த யானைகளில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து தேன்கனிக்கோட்டை, உரிகம், ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளில் நிரந்தரமாகத் தங்கியுள்ளன.

    இந்த யானைகள் கடந்த சில வாரங்களாக வனப்பகுதியையொட்டியுள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி குந்துக்கோட்டை செல்லும் சாலையில் ஒற்றை யானை நீண்ட நேரமாகச் சாலையில் சுற்றியது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டுக் காத்திருந்தனர்.

    அப்போது, சாலையில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களை ஒற்றை யானை துரத்தியதால், பொது மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுதொடர்பாக தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு வந்து யானையை வனப்பகுதிக்குள் இடம் பெயரச் செய்தனர்.

    இதேபோல, தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 4 யானைகள் லிங்கதீரனப் பள்ளி கிராமத்துக்குள் புகுந்து அங்கு அமைக்கப் பட்டிருந்த மின்வேலியைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் உள்ள விளை நிலத்தில் புகுந்து தக்காளிச் செடிகளைச் சேதப்படுத்தின.

    இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, "வனத்தை விட்டு தற்போது யானைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு யானைகளிடமிருந்து மக்களையும், விளை நிலத்தை யும் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

    Next Story
    ×