என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்- வேளாண்மை இயக்குநர் தகவல்
- மண்ணின் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகின்றது.
- மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை உழவு செய்வதனால் மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வேர்கள் எளிதில் வளர்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிருக்கு கிடைப்பதால் நன்கு வளர்ச்சி அடைகின்றன.
தற்போது சூளகிரி வட்டாரத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் இந்த மழையை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் தவறாமல் கோடை உழவு செய்து கொள்ளுமாறும் அதானால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குநர் ஜான் லூர்து சேவியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நன்கு ஆழமாக உழவு செய்யும்போது கீழ் பகுதியில் உள்ள மண் மேலாகவும், மேலே உள்ள மண் கீழாகவும் மாறும்போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால் சத்துப் பற்றாக்குறை பிரச்சினை குறைகிறது.
கோடை உழவு செய்வதனால் மண்ணின் அடியில் உள்ள வேர்களை தாக்கும் மற்றும் நோய்களை உண்டாக்கும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டுவரப்பட்டு சூரியஒளி மற்றும் வெப்பம் காரணமாக கொள்ளப்படுகின்றன.
மேலும் மண்ணிலிருந்து வெளி வரும் சிறு பூச்சிகள்,கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தி தின்று அவைகளை அழித்து விடுவதால் அடுத்து சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் இயற்கை முறையிலேயே கட்டுப்படுத்த ஏதுவாகின்றது.
மண்ணின் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப்படுகின்றது.
மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது.
மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. மண்ணில் உள்ள களைகளின் விதைகள் முளைத்து செடிகளாக வளர்கிறது.
மறு உழவு செய்யும் போது களை செடிகள் மடக்கி உழப்பட்டு மீண்டும் களைகள் வராமல் தடுக்க படுவதால் களை மேலாண்மைக்கான செலவு மற்றும் நேரம் சேமிக்கபடுகின்றது. களை செடிகள் இயற்கை எருவாக்கப்படுகிறது.
மேற்கூறியவற்றை கடைபிடித்தால் எளிதில் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம்.
இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.






