என் மலர்tooltip icon

    ஈரோடு

    குடிநீர் கேட்டு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட ஆனந்தம் பாளையம் ஊராட்சி குட்டக் காட்டுவலசில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடி தண்ணீர் வரவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலாவை முற்றுகையிட்டனர்.

    அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா உடனே குடிநீர் பிரச்சினை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

    இதேபோல் ஆனந்தம் பாளையம் ஊராட்சி சிவானந்தா காலனியில் வசித்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிதண்ணீர் இல்லை என்று கூறி வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து தங்கள்பகுதியில் போதிய குடிநீர் இல்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    அந்தியூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அந்தியூர் அடுத்த நெரிசிப் பேட்டை முத்துசாமி வீதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மனைவி சின்னம்மாள் (வயது 65). சம்பவத்தன்று சின்னம்மாள் மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்று கொண்டிருந்தார். பவானி- மேட்டூர் ரோட்டில் நடந்து வந்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்பாராதவிதமாக சின்னம்மாள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல் அறுக்கும் எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 பெண்கள் பலியானார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    காங்கயம் அருகே ராமலிங்கபுரத்தில் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இன்று காலை நெல் அறுக்கும் எந்திரத்தை ஒரு டிராக்டரில் ஏற்றிக்கொண்டு 13 பெண் தொழிலாளர்கள் வந்து தொண்டிருந்தனர். இதில் டிராக்டரில் 10 பெண்களும், நெல் அறுக்கும் எந்திரத்தில் 3 பெண்களும் உட்கார்ந்திருந்தனர்.

    காங்கயம் அடுத்த ஆலாம்பாடி அருகே வந்த போது ரோட்டில் திடீரென ஒரு பாம்பு சென்று கொண்டிருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர், உடனே ஸ்டிரியங்கை திருப்பினார். இதில் எதிர்பாராத விதமாத ஸ்டிரியங் உடைந்தது. இதனால் டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்த டிராக்டர் எதிரே வந்த மற்றொரு டிராக்டர் மீது மோதியது. பின்னர் ரோட்டோரம் இருந்த பள்ளத்தில் நெல் அறுக்கும் எந்திரத்துடன் டிராக்டர் கவிழ்ந்தது.

    இதில் நெல் எந்திரத்தில் உட்கார்ந்திருந்த சென்னிமலை அருகே உள்ள புதுபாளையம் சக்தி நகர் சேர்ந்க சரசாள் (வயது 55) சரசுவதி (30) ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயம் அடைந்த 11 பெண்களையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பு வைத்தனர். இதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒரு பெண் இறந்தார். பலியான இந்த பெண்ணின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை.

    காங்கயம் அரசு ஆஸ்பத்திரியில் காயம் அடைந்த 10 பெண்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக டிராக்டரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் (20) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நெல் அறுக்கும் எந்திரம் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சகுந்தலா. அவருடைய மகன் சரவணன் (வயது 30). இவருடைய மனைவி வசந்தி (25). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சரவணனுக்கும், வசந்திக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தர்சன் (1½) என்ற ஆண் குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் சரவணன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வேலைக்காக ஐதராபாத் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் வசந்தியும், சகுந்தலாவும், குழந்தை தர்சன் மட்டும் இருந்து வந்தனர். நேற்று மதியம் சகுந்தலா குழந்தை தர்சனுக்கு பால் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் சரவணன் வீட்டில் இருந்து தர்சன் அழும் சத்தம் வெகு நேரமாக கேட்டு கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது அங்கு வசந்தி மின்விசிறியில் சேலையில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டு இருந்தார். தொங்கிய அவரது கால்களை பிடித்தபடி பசியில் குழந்தை தர்சன் ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுது கொண்டிருந்தான்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய வசந்தியை மீட்டனர். அப்போது அவர் இறந்ததுவிட்டது தெரியவந்தது. வசந்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும் வசந்திக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் கோபி சப்-கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    சத்தியமங்கலம் அருகே மீண்டும் இன்று ஊருக்குள் புகுந்து சிறுத்தை அட்டகாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி பண்ணாரி அருகே உள்ள ராஜன்நகர் ஊராட்சியையொட்டி அடர்ந்த காடு உள்ளது.

    இந்த காட்டுக்குள் சமீபகாலமாக காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள், குரங்குகளை சிறுத்தைகள் விரட்டி வேட்டையாடி வருகிறது. அப்படி விரட்டி வரும் சமயத்தில் ஊர் ஓரம் உள்ள ஆட்டு- மாட்டு தொட்டியில் அடைக்கப்பட்டுள்ள ஆடு- மாடுகளையும் சிறுத்தைகள் அடித்து தின்று வருகிறது.

    கடந்த 2 நாட்களாக தொடர்ந்து 2 ஆடு மற்றும் கன்றுக்குட்டிகளை சிறுத்தை அடித்து தின்று விட்டு சென்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் ராஜன்நகரை அடுத்த கஸ்தூரிநகரில் உள்ள துரைசாமி என்பவரது ஆட்டு பட்டிக்குள் ஒரு சிறுத்தை புகுந்தது.

    அந்த பட்டியில் 5 ஆடுகள் இருந்தது. இதில் ஒரு ஆட்டின் மீது பாய்ந்து கடித்து அந்த சிறுத்தை குதறியது. ஆட்டின் சத்தத்தை கேட்டதும் வீட்டியிலிருந்து வெளியே வந்த துரைசாமியின் மனைவி அமராவதி, இதை பார்த்து திடுக்கிட்டு சத்தம் போட்டார்.

    அவரது சத்தத்தை கேட்டு அந்த சிறுத்தை அங்கிருந்து பாய்ந்து காட்டுக்குள் புகுந்து விட்டது. அவர் மட்டும் வெளியே வந்து சத்தம் போட்டிருக்காவிட்டால் மீதி உள்ள 4 ஆடுகளையும் அந்த சிறுத்தை கொன்று இருக்கும். சிறுத்தை தாக்கிய ஆடு ஆபத்தான நிலையில் உள்ளது.

    ராஜன்நகர் பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    இதனால் மாலை 6 மணிக்கு மேல் வெளியே நடமாடவும் பயப்படுகிறார்கள். ஊருக்குள் புகுந்து ஆடுகளையும், மாட்டையும் அடித்து வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ஈரோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு 46 புதூர் கே.ஏ.எஸ்.நகர், முதல் வீதியை வீதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது60). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 மகன்கன் உள்ளனர். ஒரு மகன் டெல்லியிலும், ஒரு மகன் சென்னையிலும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    சென்னையில் வேலை பார்க்கும் மகனை பார்ப்பதற்காக ரவீந்திரன் மனைவியுடன் ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சென்றார். நேற்று ஈரோட்டிற்கு திரும்பி வந்தார்.

    வீட்டின் கேட்கதவு திறந்து இருந்தது. வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோ கட்டப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது.

    பீரோவில் இருந்த 8 பவுன் நகை, 15 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம ஆசாமிகள் இந்த கைவரிசை காட்டி உள்ளனர்.

    இதே போன்று கே.ஏ.எஸ். நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (62). ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவரது அண்ணன் இறந்துவிட்டார். அதனால் அண்ணன் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று விட்டார்.

    பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ கடப்பாரையால் உடைக்கப்பட்டு இருந்தது.

    பீரோவில் இருந்த 2 பவுன் நகை, 5ஆயிரம் பணம் கொள்ளை போய் இருந்தது. கொள்ளை நடந்த இடம் எப்போதும் ஆட்கள் நடமாட்டத்துடன் இருக்க கூடிய பகுதியாகும். ஒரே நாள் நள்ளிரவில் கொள்ளையர்கள் அடுத்தடுத்து கைவரிசை காட்டி உள்ளது அந்த பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது.

    இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே கும்பலே ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இரண்டு வீடுகளிலும் கடப்பாறை கொண்ட பீரோவை உடைத்து நகையையும், பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் விசாரித்து வருகிறார்.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் ஒற்றை யானை அட்டகாசத்தால் 200 வாழைகள் நாசம் அடைந்தன.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதி விளாமுண்டி காட்டிலிருந்து நேற்று முன்தினம் ஒரு ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது. இந்த யானை பவானிசாகர்- புளியம்பட்டி ரோட்டில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளையும் பொது மக்களையும் பயமுறுத்தியது. பிறகு அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வந்து வானவெடிகளை வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    அதே ஒற்றை யானை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. பு.புளியம்பட்டி அருகே உள்ள கோடேபாளையம் செல்வம் என்பவரது வாழை தோட்டத்துள் புகுந்தது.

    இதைக்கண்ட செல்வம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் ஒரு மணிநேரம் போராடி பட்டாசுகள் வெடித்து அந்த யானையை காட்டுக்குள் விரட்டினர். அதிகாலை 3 மணிக்கு புகுந்த அதே யானை மீண்டும் 4 மணிக்கு காட்டை விட்டு வெளியேறி செல்வம் தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு நன்கு விளைந்திருந்த 200-க்கும் மேற்பட்ட ரஸ்தாளி வாழைகளை அந்த யானை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தியது.

    ஊர் மக்களுடன் வன ஊழியர்களும் சேர்ந்த பட்டாசுகளை வெடித்து விரட்டினர். ஆனால் ருசி கண்ட அந்த யானையோ காட்டுக்குள் செல்லாமல் அடம் பிடித்தது. பிறகு ஒரு வழியாக 6 மணிக்கு விளாமுண்டி வனத்துக்குள் புகுந்தது.
    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திருமணம் ஆன வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    ஈரோடு:

    பவானி வர்ணபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 31) திருமணம் ஆகிவிட்டது. இவர் தனது அண்ணன் அருமை பெருமாள் கடையில் 1½ ஆண்டு வேலை பார்த்து வந்தார்.

    அப்போது பவானி பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கடைக்கு வரும்போது அவருடன் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பழகி வந்தனர். அப்போது மாணவிக்கு அவர் திருமண ஆசை காட்டி பழகி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 01.12.2014 அன்று மாணவியிடம் விஜயன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். இதேபோல் 03.12.2014 அன்று பள்ளி முடிந்து வந்த மாணவியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதனால் அந்த மாணவி கர்ப்பம் ஆனார் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.

    இதுதொடர்பாக பவானி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. விஜயனை போலீசார் கைது செய்தனர். மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜயன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இதுபற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றம் சாட்டப்பட்ட விஜயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 பிரிவின் கீழ் தலா ரூ.100 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாத ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக வக்கீல் சுமதி ஆஜர்ஆனார்.
    கடும் பனிமூட்டம் காரணமாக ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் 30 நிமிடம் தாமதமாக வந்தன.
    ஈரோடு:

    ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று கடும் பனி மூட்டம் இருந்தது.

    இந்த பனிப்பொழிவு காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை போட்டபடியே சென்றன.

    இதேபோல் பனிமூட்டம் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவை, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களும் இன்று காலை 30 நிமிடம் தாமதமாகவே வந்தன.

    இன்று காலை ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், கே.கே. எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் இன்று ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்தைவிட 30 மற்றும் 40 நிமிடம் தாமதமாகவே வந்தது.

    சென்னையில் இருந்து வந்த ஒரு எக்ஸ்பிரஸ் என்ஜின் டிரைவர் கூறும்போது, ‘‘வழியில் தண்டவாளம் முழுவதும் பனி படலம் புகை மண்டலம் போல் இருந்தது. இதனால் வேகமாக செல்ல முடியவில்லை’’ என்று கூறினார்.
    ஈரோடு கல்லூரி மாணவி சாவில் மர்மம் நீடிப்பதால் உடல் உறுப்புகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம் எஸ்.எஸ்.வி நகரை சேர்ந்தவா ராமசாமி .ஆட்டோ டிரைவா. இவரது மகள் சத்தியா (வயது 19). இவா சித்தோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை சத்தியா கல்லூரிக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்த போது அவர் சோர்வாக இருந்தார்.

    இந்த நிலையில் அவர் திடீர் என்று மயங்கி விழுந்ததாக கூறி அவரது பெற்றோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சத்தியா பரிதாபமாக இறந்தார்.

    சத்தியா திடீர் என்று ஏன் மயங்கி விழுந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது போன்ற காரணம் எதுவும் தொயவில்லை.

    அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. எனவே சத்தியாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அவரது உடலை ஒப்படைத்தனர்.

    இந்த பிரேத பரிசோதனையின் முடிவிலும் சத்தியாவின் திடீர் சாவு குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை.

    எனவே மாணவி சத்தியாவின் உடல் உறுப்புகள் கோவைக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது இதன் ஆய்வு அறிக்கை இன்னும் 10 நாளில் வரும் என்றும் அப்போது சத்தியாவின் மரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என்றும் வீரப்பன் சத்திரம் போலீசார் தொவித்தனர்.

    சென்னிமலை முருகன் கோவிலில் அர்ச்சகர்கள் தங்கும் அறையில் பாம்பு இருந்ததால் அலறியடித்து ஒட்டம் பிடித்தனர். சாமி கும்பிட வந்திருந்த பக்தர்களும் பயந்து நடுங்கினர்.

    சென்னிமலை:

    சென்னிமலைமலை மீது புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க முருகன் கோவில் உள்ளது. இங்கு விசே‌ஷ நாட்களிலும் வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில்பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் சாமி தரினசம் செய்ய முருகன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு பூஜை முறைகளை கவனித்து கொள்ள 18 அர்ச்சகர்கள் உள்ளனர் இவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருவர் விதம் தொடர்ந்து இரவு பகல் பணிகளில் இருப்பர்.

    சென்னிமலை முருகன் கோவிலை பொறுத்த வரை காலை 5.30 மணிக்கு நடை திறந்தால் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். அதன் பின்பு பள்ளியறை பூஜை நிறைவு பெற்று அனைவரும் வந்த பின்பு கோவில் நடை சாத்தப்பட்டு ராஜா கோபுரத்திற்கு வெளியே வாட்சுமேன் இருப்பார்

    அங்கு உள்ள ஒரு தற்காலிக செட்டில் இரவு அர்ச்சகர்கள் தங்கி வருகின்றனர். இந்த தற்காலிக செட் பாதுகாப்பு குறைவாக உள்ளது. மேலும் அடந்த வனப்பகுதி வேறு தற்காலிக செட்டில் அடிக்கடி சிறு சிறு பாம்புகள், வி‌ஷ சந்துகள் வந்து தங்கி கொள்வதும். அதை விரட்டி விட்டு இரவு தங்குவதும். அதற்கு பயந்து அர்ச்சகர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்து இருப்பதும் தொடர் வாடிக்கை ஆகி விட்டது.

    இந்த நிலையில் நேற்று அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் வரும் ஆதலால் அனைத்து அர்ச்சகர்களும் மலை கோவிலில் இருந்தனர். நேற்று பகல் நேரத்தில் பெரிய மலை பாம்பு போல் மிக நீண்ட வி‌ஷ பாம்பு ஒன்று அர்சகர்கள் தங்கும் அறையில் வந்து தங்கி கொண்டது.

    பகல் நேரத்தில் ஓய்வு எடுக்கலாம் என சென்ற அர்ச்சகர் பாம்பினை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார். அதை பார்த்து சாமி கும்பிட வந்திருந்த பக்தர்களும் பயந்து நடுங்கினர். அதன் பின்பு அர்ச்சகர் மூன்று பேர் சேர்ந்து அந்த அறையில் இருந்து பாம்பினை மெதுவாக விரட்டி வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

    இதனால் இரவு நேரத்தில் அர்ச்சகர்கள் தங்குவதற்கு நல்ல முறையில் பாதுகாப்பான அறை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அல்லது கோவில் உள்புறம் படுத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர்கள் போர் கொடி தூக்கும் முன் கோவில் நிர்வாகம் வசதிகள் ஏற் படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் பவானி புதிய பஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). ஆட்டோ டிரைவர்.

    இவரது நண்பர் அன்பு. இவர் பவானி புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கும் பவானி வர்ணாபுரத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் அன்புவும் சசிக்குமாரும் சேர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தியை கொலை செய்தனர். பவானி போலீசார் அப்போது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    பிறகு இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். கொலையாளிகள் 2 பேர் வெளியே வந்து சுற்றுவதை கண்டு கொலை செய்யப்பட்ட கார்த்திக்கின் தம்பி சந்திர சேகரனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இருவரையும் தீர்த்து கட்ட கங்கணம் கட்டி கொண்டிருந்தார். அதற்கான நேரத்தையும் எதிர் பார்த்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சந்திரசேகர் தனது நண்பர் பிரகாசுடன் பவானி புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஆட்டோ டிரைவர் சசிகுமாரும் வந்தார். அவரை கண்டதும் சந்திர சேகருக்கு கோபம் தலைக்கு ஏறியது. தனது அண்ணனை கொன்ற இவனை தீர்த்து கட்ட நேரம் வந்து விட்டது என்று எண்ணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்த சசிகுமார் மீது பாய்ந்தார்.

    இதை கண்டதும் உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தார். எனினும் சந்திரசேகர் விடவில்லை. புதிய பஸ் நிலையம் பகுதியில் அவரை கத்தியுடன் விரட்டினார்.

    மக்கள் நடமாட்டம் மிகந்த இடத்தில் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் பயந்து ஓடினர்.

    அப்பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். முன் சசிக்குமாரை மடக்கிய சந்திரசேகர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

    10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தி குத்து விழுந்ததால் சசிகுமார் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதை கண்ட சந்திர சேகரும் அவரது நண்பர் பிரகாசும் தப்பி ஓடி விட்டனர்.

    இந்த சம்பவம் பவானி நகரையே உலுக்கி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சசிகுமாரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய சந்திர சேகரையும் அவரது நண்பர் பிரகாசையும் வலை வீசி தேடி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட சசிகுமாருக்கு சரண்யா என்ற மனைவுயும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
    ×