என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ராசிபுரத்தில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்தில் சிறிது நேரம் நின்று விட்டு பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது.
அப்போது பஸ்சில் ஒரு இளம்ஜோடி ஏறியது. இந்த ஜோடி இடது பக்கம் உள்ள இருவர் உட்காரும் சீட்டில் அமர்ந்து கொண்டனர். பஸ் புறப்பட்டதில் இருந்து இருவரும் சிரித்து... சிரித்து பேசி ஒருவர் மீது ஒருவர் விழுந்து மகிழ்ந்தப்படி வந்தனர்.
பஸ்சில் கூட்டம் அதிகம் இல்லாததால் அவர்களுக்கு மேலும் குஷியை ஏற்படுத்தியது. ஜன்னல் ஓரத்தில் உடகார்ந்திருந்த பெண்ணின் தலை முடி காற்றில் பறந்தது. இதை அருகே இருந்த வாலிபர் கவனித்து முடியை கோதி விட்டு கொண்டே இருந்தார். பதிலுக்கு அந்த பெண் வாலிபர் கன்னத்தில் மொட்டுகள் போல இருந்த வியர்வை துளிகளை தனது சேலையால் துடைத்தார். திடீரென அந்த வாலிபர் அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தமிட... பதிலுக்கு அந்த இளம் பெண்ணும் முத்தமிடவும் அந்த பஸ் காதல் வாகனமாக மாறி விட்டது.
இதை நோட்டமிட்டபடி பார்த்த பயணிகள் சிலர் முகம் சுழித்தனர். ‘‘இவர்கள் புதுமண தம்பதியாகவே இருக்கட்டும் அதற்காக ஓடும் பஸ்சில் இப்படியா கொஞ்சி குலாவுவது...? இது அநாகரீகமாக இல்லையா...? என்று பயணிகள் முணு முணுத்தனர்.
பஸ் அவினாசி சென்றதும் 10 நிமிடம் அந்த பெண் வாலிபர் மடியில் படுக்க அடுத்த 10 நிமிடம் அந்த இளம்பெண் மடியில் வாலிபர் படுத்து கொள்ள இந்த காதல் லீலைகளை ஒரு சில பயணிகள் ரசித்தப்படியே வந்தனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி அடுத்த 46 புதூர் முத்துக்கவுண்டன் பாளையம், பெரியார்நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் குணா என்கிற எஸ்ரா (வயது19).
குணாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்து உள்ளனர். இதனால் குணா சில நாட்களாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று குணா குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. நேராக தனது படுக்கையறைக்கு சென்று படுக்க சென்று விட்டார்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கபடாததால் சந்தேகம் அடைந்த குணாவின் தந்தை கதவை தட்டியுள்ளார். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவுயுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறையில் குணா தூக்குபோட்டு தொங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர் குணா வரும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட வேப்பத்தி, ஓத்திபட்டி, வெள்ளாளபாளையம், தாளபூட்டைபுதூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன் தினம் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த கோர மழையுடன் காற்று வீசியதில் ஏராளமான வாழைகள் சேதமடைந்தது.
இதில் வேப்பத்தி பகுதியை சேர்ந்த எஸ்.பி.பெருமாள் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் உள்ள கதளி வாழை, செவ்வாழை, மோந்தல் வாழை ஆகிய வாழை பயிர்கள் சேதமடைந்து உள்ளது.
மேலும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சின்னப்பன், சம்பத், குருமூர்த்தி, மனோகரன் உள்பட விவசாயிகளின் வாழைகளும் சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வேப்பத்தி பகுதியில் மட்டும் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமடைந்து உள்ளது.
விவசாய நிலங்களில் வாழைகள் சேதமடைந்த சம்பவ இடத்திற்கு வந்து கிராம நிர்வாக அலுவலர் சதீஸ் மற்றும் நிலவருவாய் ஆய்வாளர் பூங்கொடி ஆகியோர் பார்வையிட் டனர். சூறாவளி காற்றில் வாழைகளை இழந்த விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர்.
பலத்த காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபியில் த.மா.கா. வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்துகொண்ட கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆர்.கே. நகர் இடை தேர்தலில் த.மா.கா. போட்டியிடுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) முடிவு அறிவிக்கப்படும்.
இன்று முதல் 3 வாரம் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கு சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து கட்சியை மேலும் வலிமைபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் நிலை மிக பரிதாப மாக உள்ளது. கேளா, கர்நாடகா, ஆந்திரா என சுற்றி உள்ள மாநிலங்களில் ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி வருகிறார்கள். இதனால் தமிழகம் பாலை வானம் ஆகும் சூழ்நிலை உள்ளது.
கேரளா அரசு பவானி ஆற்றில் 6 தடுப்பணைகள் கட்டி வருகிறது. இதில் 2 அணைகள் கட்டிமுடிக்கப்பட்டு விட்டது. இன்னும் 4 அணைகளை கட்ட தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதை மத்திய-மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு வந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு அத்திக் கடவு- அவினாசி திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த நிதி போதாது. திட்டத்தை நிறைவேற்ற ரூ.6352 கோடி தேவைப்படுகிறது.
இதனால் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.
பவானி:
பவானி அருகே உள்ள பவளவாய் பேட்டை தபால் நிலைய வீதியை சேர்ந்தவர் குருவாயம்மாள் (வயது 85).
இவர் குடோன் வைத்து நடத்தி வருகிறார். திருப்பூரில் இருந்து பழைய பனியன், வேட்டி போன்ற துணிகளை வாங்கி கால் மிதிமேட் தயாரித்து வியாபாரிகளுக்கு கொடுத்து விற்பனை செய்து வந்தார்.
இவருக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மாரசாமி என்ற மகன் மட்டும் தாயாருடன் இருந்து வந்தார்.
நேற்று குடோனில் குருவாயம்மாள் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மாரசாமி எழுந்து வெளியே சென்று விட்டார்.
அவர் போன சிறிது நேரத்தில் குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் ஏற்பட்ட புகை மூட்டத்தில் குருவாயம்மாள் சிக்கி மயங்கினார்.
இதில் அவரது உடலிலும் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் குருவாயம்மாள் உடல் கருகி பலியானார்.
குடோனில் தீப்பிடித்து எரிந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
குடோனில் இருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. மீதி உள்ள துணிகள் தீ பிடிக்காமல் தீயணைப்பு வீரர்கள் கிளறி விட்டனர்.
இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது? என்று தெரிய வில்லை. மின் கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது எப்படி தீ பிடித்தது? என்று பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
ஈரோடு வடக்கு மாவட்ட பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டம் கோபிசெட்டி பாளையத்தில் நடந்தது. இதில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே கிடையாது. அது பல துண்டாக உடைந்து விட்டது. இதனால் அந்த கட்சியின் சின்னம் இரட்டை இலை முடக்கி வைக்கப்படும் என்றே தெரிகிறது.
ஆர்.கே. இடைத்தேர்தலை தி.மு.க.வும் மற்றும் காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
பா.ஜனதா சார்பில் கங்கை அமரன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் நாங்கள் தீவிரமாக உழைத்து வெற்றி பெறுவோம்.
மத்திய அரசு தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. மீனவர் பிரச்சனையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொம்பணைப்புதூர் அம்மன் திருமண மண்டபத்தில் இன்று மதியம் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாய கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்குக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சதீஸ் தலைமை தாங்கினார்.
இந்த கருத்தரங்கில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்டு திரும்பிய அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கோவை மாவட்டம் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், “நான் ஓ.பி.எஸ்.அணிக்கு மாற போவதாக கூறியுள்ளாரே?” என்று கேட்டபோது, அதற்கு செங்கோட்டையன் கூறியதாவது:-
சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் கல்குவாரியில் நடந்துள்ள ஊழலை தான் விசாரிக்க கூறியுள்ளார். அதுகுறித்து விசாரணை நடத்தப்படும். அவர் அணி மாற மாட்டார். எங்களுடன் தான் இருப்பார். இது தவறான தகவல்.

ஆர்.கே.நகர் தொகுதியில் சின்னம்மா சசிகலா ஆசியுடன் துணைப்பொதுச் செயலாளர் தினகரன் போட்டியிடுகிறார். அவர் நிச்சயமாக அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிவிட்டு சென்ற பிறகு அதிகாரிகளை விவசாயிகள் திடீரென்று முற்றுகையிட்டனர்.
“இந்த கருத்தரங்கில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. விவசாயிகளை மேடையில் ஏற அனுமதிக்கவும் இல்லை. இந்த நிகழ்ச்சி விவசாயிகள் நிகழ்ச்சியாக தெரியவில்லை. அரசியல் நிகழ்ச்சியாக தான் தெரிந்தது” என்று கூறினர்.
இதை தொடர்ந்து விவசாயிகளை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டமுத்தூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது 80).
சம்பவத்தன்று பழனியம்மாள் தனதுவீட்டு திண்ணையில் உட்கார்ந்துஇருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர்.
அவர்கள் தனியாக உட்கார்ந்து இருந்த பழனியம்மாளிடம் விலாசம் கேட்பதுபோல நடித்தனர். அப்போது அவர்கள் திடீர் என்று பழனியம்மாளின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு ஓடினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருடன் திருடன் பிடியுங்கள் என்று சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய 2 பேரை விரட்டினர். ஆனால் அதற்குள் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி:
தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
மொடக்குறிச்சி யூனியன் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மூர்த்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் லோக நாதன், ஈரோடு மாவட்ட வருவாய்த்துறை சங்க பொறுப் பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியம், தேர்வுநிலை, சிறப்பநிலை, கூடுதல் பொறுப்புப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு:
முங்கத்தொழுவு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மக்கள் குடிநீர் கேட்டு சென்னிமலை யூனியன் அலுவலம் முன்பு காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னிமலை ஒன்றியம், முருங்கத்தொழுவு கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட மங்களபுரம், சல்லிமேடு, அம்மன்கோவில் புதூர் ஆகிய பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் ஒரு மாத காலமாக குடிநீர் இன்றி சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம் இதனால் 50-க்கும்மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சென்னிமலை யூனியன்அலுவலகம் வந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். குடிநீர் கேட்டும் அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் ஈரோடு மாவட்டம்பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
சென்னை கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்ட போது இவரும் அங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்ட நிலையில் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இதுபற்றி சிவசுப்பிரணியத்திடம் கேட்ட போது தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதுபற்றி ஆய்வு கூட்டத்துக்கு வந்த அமைச்சர்களிடம் கூறி விட்டதாகவும் தொவித்தார்.
இந்தநிலையில் சென்னையில் நேற்று நடந்த ஆட்சி மன்ற குழுவில் தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது தோப்பு வெங்கடாசலம் சுற்று சூழல் துறை அமைச்சராகவும், ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக பதவி வகித்து வரும் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கோபி தொகுதி எம்.எல்.ஏ கே. ஏ.செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் தோப்பு வெங்கடாச்சலத்தின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் எம்.பி சத்யபாமாவும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஓ.பி.எஸ் அணிக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலமும் ஓ.பி.எஸ்.அணிக்கு செல்ல முடிவு செய்து உள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றி கேட்பதற்காக தோப்பு வெங்கடாச்சலத்திடம் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் எண்ணில் இருந்து அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக கூறப்பட்டது.
தோப்பு வெங்கடாச்சலத்தின் உதவியாளரிடம் கேட்ட போது, “எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாதது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர் இன்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்று உள்ளார்” என்று கூறினார்.
இந்தாண்டுக்கான குண்டம் விழா இன்று (வியாழக்கிழமை) மாலை பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வரும் 22-ந் தேதி மகிஷாசூரமர்தனம் எருமைகிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
29-ந் தேதி காலை கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து அன்று முதல் சாமி பல்வேறு வாகனங்கள் மூலம் திருவீதி உலா வருகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி காலை குண்டம் விழா நடக்கிறது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதிக்கிறார்கள். ஈரோடு மாவட்டம் முழுவதுமிருந் தும் பக்தர்கள் திரளாக குண்டம் விழாவில் பங்கேற்கிறார்கள்.
குண்டம் விழாவை தொடர்ந்து 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தேர் திருவீதி உலா வருகிறது. 11-ந் தேதி பாரிவேட்டை நடக்கிறது. 12-ந் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.






