என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் ஓ.பி.எஸ் அணிக்கு தாவலா?
    X

    பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் ஓ.பி.எஸ் அணிக்கு தாவலா?

    பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலம் ஓ.பி.எஸ்.அணிக்கு செல்ல முடிவு செய்து உள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    ஆனால் ஈரோடு மாவட்டம்பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாச்சலம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    சென்னை கூவத்தூரில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்ட போது இவரும் அங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோட்டில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்ட நிலையில் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம், மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

    இதுபற்றி சிவசுப்பிரணியத்திடம் கேட்ட போது தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இதுபற்றி ஆய்வு கூட்டத்துக்கு வந்த அமைச்சர்களிடம் கூறி விட்டதாகவும் தொவித்தார்.

    இந்தநிலையில் சென்னையில் நேற்று நடந்த ஆட்சி மன்ற குழுவில் தோப்பு வெங்கடாச்சலம் கலந்து கொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது தோப்பு வெங்கடாசலம் சுற்று சூழல் துறை அமைச்சராகவும், ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

    இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சராக பதவி வகித்து வரும் அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் கோபி தொகுதி எம்.எல்.ஏ  கே. ஏ.செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    மேலும் தோப்பு வெங்கடாச்சலத்தின் தீவிர ஆதரவாளரான திருப்பூர் எம்.பி சத்யபாமாவும் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் ஓ.பி.எஸ் அணிக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் தோப்பு வெங்கடாச்சலமும் ஓ.பி.எஸ்.அணிக்கு செல்ல முடிவு செய்து உள்ளதாக அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது பற்றி கேட்பதற்காக தோப்பு வெங்கடாச்சலத்திடம் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் எண்ணில் இருந்து அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக கூறப்பட்டது.

    தோப்பு வெங்கடாச்சலத்தின் உதவியாளரிடம் கேட்ட போது, “எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாதது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர் இன்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்று உள்ளார்” என்று கூறினார்.
    Next Story
    ×