என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெட்ரோல்,டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் இன்று 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.
    ஈரோடு:

    பெட்ரோல்,டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். வேக கட்டுப்பாடு கருவி பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரைற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று லாரி உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    இதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை முதல் வேலை நிறுத்தம் தமிழகம் முழுவதும் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மஞ்சள், ஜவுளி, எண்ணை வித்துக்கள், இரும்பு பொருட்கள் போன்ற பொருட்களை ஏற்றி கொண்டு தினமும் 3500 லாரிகள் செல்கின்றன,

    மேலும் 3500 லாரிகள் ஈரோடு மாவட்டத்துக்குள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளி மாநிலத்துக்கு செல்லும் 3500 லாரிகளும் நேற்று இரவு முதலே நிறுத்தப்பட்டு விட்டன.ஈரோடு மாவட்டத்துக்குள் ஒடும் லாரிகள் இன்று காலை முதல் ஓடவில்லை.

    இந்த வேலை நிறுத்தத்துக்கு லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் ஆதரவு தொவித்து உள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினம் முதலே லாரி புக்கிங் அலுவலகங்களில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்குகள் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது .

    இந்த லாரி ஸ்டிரைக் காரணமாக தினமும் கோடிக்கண்கான ரூபாய் பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன. ஒரு நாளைக்கு சுமார்ரூ. 10 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஈரோடு மாவட்டத்தில் தேக்கம் அடையும் என்று கூறப்பட்டு உள்ளது .

    பெருந்துறை, சத்தியமங்கலம் , கோபி பவானி,சென்னிமலை உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள லாரிகளும் இன்று முதல் ஓடவில்லை.
    ஈரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி இறந்தார். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    விழுப்புரம் மாவட்டம் அய்யனார்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி (வயது50).பெரியசாமி ஈரோட்டு வாய்க்கால்மேட்டில் உள்ள தனது தம்பி வீட்டில் தங்கி கரும்பு வெட்டும் கூலி வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பெரியசாமியும் அவருடன் வேலை பார்க்கும் குப்பன் என்பவரும் வேலையை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

    ஈரோடு-பெருந்துறை ரோடு வாய்க்கால்மேடு அருகே உள்ள மீன் கடைக்கு சென்று மீன் சாப்பிட்டு விட்டு வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் பெரியசாமி மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் பெரியசாமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பெருந்துறை அருகே ஸ்கூட்டரில் சென்ற அரிசி வியாபாரி மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஈரோடு:

    பெருந்துறை அருகே உள்ள சரவம்பதி என்ற இடத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது70). நிதி நிறுவன அதிபரான இவர் அரிசி வியாபாரமும் செய்து வந்தார்.

    நேற்று இவர் வேலை வி‌ஷயமாக ஸ்கூட்டரில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சென்னியப்பன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சென்னியப்பன் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு பஸ்சில் சென்ற பெயிண்டர் இருக்கையில் அமர்ந்தபடியே மரணம் அடைந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    வெள்ளகோவில் அருகே உள்ள குட்டை காட்டு புதூரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). பெயிண்டர். இவர் வேலை வி‌ஷயமாக சென்னை சென்றார். பிறகு அங்கிருந்து ரெயில் மூலம் ஈரோடு வந்தார்.

    பிறகு இரவு 10 மணி அளவில் ஈரோட்டிலிருந்து வெள்ளகோவிலுக்கு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். பஸ் வெள்ளகோவில் போய் சேர்ந்தது.

    பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் கீழே இறங்கி விட்டனர். ஆனால் சின்னசாமி மட்டும் இறங்க வில்லை.

    பஸ் டிரைவர்- கண்டக்டரும் சென்று பார்த்த போது இருக்கையில் அமர்ந்தபடியே சின்னசாமி பரிதாபமாக இறந்து கிடந்தார்.

    இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சின்னசாமி எப்படி இறந்தார்? என்று பிரேத பரிசோதனையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதி தண்ணீர்துறை என்ற இடத்தில் அழுகிய நிலையில் 22 வயதுள்ள பெண் யானை இறந்து கிடந்தது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதி தண்ணீர்துறை என்ற இடத்தில் அழுகிய நிலையில் 22 வயதுள்ள பெண் யானை இறந்து கிடந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். மேலும் வனத்துறை டாக்டர் அசோகன் தலைமையில் மருத்துவக்குழுவினர் யானையின் உடற்கூறுகளை பரிசோதனை செய்தனர்.

    இதில் யானை குடற்புழு நோய் தாக்கியதில் இறந்துள்ளது தெரிய வந்தது. தற்போது கோடை காலம் என்பதால் வனக்குட்டைகளில் போதிய தண்ணீர் இல்லாமல் இருப்பதாலும் சேறுடன் கலந்த நீரை யானைகள் பருகுவதால் தொற்று நோய் ஏற்பட்டு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு யானையின் உடல் அதே இடத்தில் பிற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டது.
    நம்பியூர் அருகே குடும்ப தகராறில் ஐஸ் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 56). ஐஸ் வியாபாரி,இவருக்கு அமுதா என்ற மனைவியும், சுப்புலட்சுமி என்ற மகளும், ஜீவா என்ற மகனும் உள்ளனர்.

    வேலுச்சாமி இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள கொளக்காடு கருப்பராயன் கோவிலுக்கு சென்றார்.

    கோவிலில் சாமி கும்பிட்ட அவர் அந்த கோவிலிலேயே தூக்குபோட்டு கொண்டார். இதனால் அவர் சிறிது நேரத்தில் பாதாபமாக இறந்தார்.

    இதை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது பற்றி அவர்கள் போலீசில் தெரிவித்தனர்.

    நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    சேலுச்சாமியின் உடல் பிரேத பாசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.

    குடும்ப தகராறு காரணமாக வேலுச்சாமி கோவிலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் விவசாயில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பிச்சாண்டம் பாளையம், தோட்டானிச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது68).விவசாயி. இவரது மனைவி தேவகி.

    சம்பவத்தன்று பழனிசாமி விஜயமங்கலத்தில் உள்ள உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளில் அவரது மகன் ராமசாமியும், அவரது மனைவியும், குழந்தைகளும் சென்றனர்.

    மூலக்கரை பஸ் நிறுத்தம் அருகே ஈரோடு- பெருந்துறை ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் பழனிசாமி வந்த மோட்டார்சைக்கிளில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.

    பின்னால் வந்த ராமசாமி இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தனது தந்தை அருகே ஓடி வந்து பார்த்தார். உடனே ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பழனிசாமியை கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பழனிசாமி இறந்து விட்டதாக தெரிவிதார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மகன் கண் எதிரே தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    டி.என்.பாளையம் அருகே கரடியை வேட்டையாடி இறைச்சி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வன சரகத்துக்குட்பட்ட மாக்கம் பாளையத்தில் டி.என். பாளையம் வன சரகர் சிவ சுப்பிரமணி, வனவர் முத்துசாமி, வன காப்பாளர் வேணுகோபால் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு 4 பேர் ஒரு சாக்கு பையுடன் சென்று கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனால் மேலும் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை வாங்கி பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்கு பையில் கரடி இறைச்சி இருந்தது தெரிய வந்தது.

    அவர்கள் காட்டுக்குள் ‘கண்ணி’ வைத்து கரடியை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சியை விற்க கொண்டு சென்றது தெரிய வந்தது.

    மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த மாதப்பன் (வயது 60), பிரகாஷ் (34), முருகன் (39), திவேந்திரன் (23) என்ற 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க ஆட்சி கவிழ்ந்து விரைவில் தேர்தல் வரும் என ஈரோட்டில் ஈஸ்வரன் பேசியுள்ளார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவிலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் பொதுகூட்டம் நடந்தது.

    மேற்குமாவட்ட செயலாளர் சிவராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராமர் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

    சசிகலாவிடமிருந்து ஒ.பி.எஸ். பிரிந்து உள்ளார். அவருக்கு முன்பாகவே இப்போது உள்ள கல்வித்துறை அமைச்சரும் இத்தொகுதி (கோபிசெட்டிபாளையம்) சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் சசிகலாவை விட்டு பிரிந்திருந்தால் நாங்கள் முதல் ஆளாக சென்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்திருப்போம்.

    சசிகலா படத்தை பயன்படுத்தவே அந்த அணியினர் தயக்கம் காட்டிவருகிறார்கள். சசிகலா படத்தை முன்னிலைப்படுத்த அக்கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்பவில்லை. பொதுமக்களும் இதை ஏற்க மாட்டார்கள்.

    இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் ஆளும் கட்சி விரைவில் கவிழும். தமிழகத்துக்கு விரைவில் தேர்தல் வரும். எனவே இப்போதே தேர்தலுக்கு நம் கட்சியினர் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் மட்டுமல்ல மக்கள் எதிர்பார்ப்புபடி தி.மு.க.வே ஜெயிக்கும். தி.மு.க. வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஆளும் கட்சி வேட்பாளரோ அவரது கட்சியின்பொதுச்செயலாளர் சசிகலா படத்தையே காட்ட முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

    இவ்வாறு ஈஸ்வரன் பேசினார்.
    ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே உள்ள குதிரை தோட்டம் என்ற பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.

    போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். மேலமருத்தூரை சேர்ந்த ஆறுமுகம், ஒரிசேரிபுதூர் முருகேஷ், அந்தியூரை சேர்ந்த மகேஷ் என்ற அந்த 3பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.10,200 பறிமுதல் செய்யப்பட்டது.

    பெருந்துறை அருகே நோய்க் கொடுமையால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் அரிகரசுதன் (வயது 18).

    இவர் கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் பிகாம் முதல் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நோய்க் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.

    இதனால் மனம் உடைந்த நிலையில் அரிகரசுதன் காணப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று அவர் தனது தாயாரின் சேலையால் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எட்வர்டு ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோட்டில் ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள பெருமாள் காடு வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 57). ரெயில்வே ஊழியர்.

    அதே பகுதியில் வசிக்கும் சிலருடன் சேர்ந்து குமார் தனது மனைவியுடன் ஆன்மீக சுற்றுலா சென்று உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்று உள்ளனர்.

    பிறகு அங்கிருந்த பீரோவையும் உடைத்து நகை-பணத்தை கொள்ளையடித்தனர்.

    இதே போல அதே பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். காவலாளியான இவர் நேற்று இரவுவேலைக்கு சென்று விட்டார்.

    அப்போது இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் அங்கு பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.950-ஐ திருடினர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

    குமார், ராஜமாணிக்கம் ஆகியோரின் வீடுகளில் கொள்ளைடித்தவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×