என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நீர்மட்டம் 40.22 அடியாக உள்ளது. இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் பவானிசாகர் அணை தற்போது கடும் வறட்சி காரணமாகவும் தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததாலும் வறண்டு போய் கிடக்கிறது. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 15 அடி சேறும்- சகதியும் கொண்டது 105 அடி வரை தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 40.22 அடியாக உள்ளது. ஊட்டி மலை பகுதியில் உள்ள அணையில் மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் பவானிசாகர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 133 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 155 கனஅடிவீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    கோடைமழை பெய்தால் அணைக்கு மேலும் தண்ணீர் வரும் என்பதால் கோடை மழையை எதிர்பார்த்து விவசாயிகளும், பொதுமக்களும் காத்திருக்கிறார்கள்.
    அரச்சலூர் அருகே லாரி மோதி 5-ம் வகுப்பு மாணவன் பலியானார். இதை தொடர்ந்து மோதிய லாரியை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.
    அரச்சலூர்:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வெள்ளியம் பாளையத்தை சேர்ந்தவர் தொம்மப்பன். இவரது மகன் பூபதி (வயது 10). 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    மாணவன் பூபதி இன்று காலை காய்கறி வாங்க வீட்டில் இருந்து கடைக்கு சைக்கிளில் சென்றான். அப்போது முன்னே ஒரு பஸ் நின்று கொண்டு இருந்தது ,

    அந்த பஸ்சை மாணவன் பூபதி முந்தி செல்ல முயன்ற போது குறுக்கே வந்த மணல் குவாரி லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது .

    இதில் கீழே விழுந்த மாணவன் பூபதி உடலில் லாரியின் சக்கரம் ஏறி நசுங்கியது . இதில் சம்பவ இடத்திலேயே மாணவன் பரிதாபமாக இறந்தான்.

    இந்த விபத்து பற்றி அறிந்ததும் , அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது .

    விபத்தை கண்டித்து ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவன் மீது மோதிய லாரியை பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.

    அப்போது அந்த வழியாக அதே குவாரியை சேர்ந்த இன்னொரு லாரி வந்தது . அந்த லாரியையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது .

    சம்பவ இடத்துக்கு போலீசாரும், அதிகாரிகளும் விரைந்தனர் .பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகனும் சம்பவ இடத்துக்கு வந்தார்.

    சுமார் 3 மணி நேரம் பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் நீடித்தது . தொடர்ந்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.
    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது புகழ் மிக்க பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கியது.
    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது புகழ் மிக்க பண்ணாரி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    அதே போல் இந்தாண்டும் குண்டம் விழா கடந்த 27-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மன் பண்ணா மற்றும் சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    ஒரு வாரத்துக்கு பிறகு அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. பிறகு கோவிலில் கம்பம் சாட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் விஷேச பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.45 மணிக்கு தொடங்கியது. முன்னதாக நேற்று குண்டத்தில் எரி கரும்புகள் (விறகுகள்) அடுக்கி வைக்கட்டு இரவு 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி வார்க் கப்பட்டது.



    தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

    தெப்பக்குளம் சென்ற அம்மன் சரியாக 3 மணிக்கு குண்டத்தின் முன்புறம் அம்மன் சப்பரம் வந்து சேர்ந்தது. பிறகு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட கற்பூரம் ஜெகஜோதியாக பிரகாசமாக எரிந்தது. சரியாக 3.45 மணிக்கு பூசாரி ராஜசேகர் முதலில் குண்டம் இறங்கினார். அதை தொடர்ந்து அம்மன் சப்பரத்துடன் பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

    அதன் பிறகு பல கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.

    ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். சிறுவர்- சிறுமிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் தீ மிதித்தனர். பல பெண்கள் தங்கள் கை குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர்.

    அப்போது அம்மா... தாயே... பண்ணாரி அம்மா... என்ற பக்தி கோ‌ஷங்கள் வனப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.

    பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்ததும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் கால் நடைகளான ஆடு- மாடுகள் மதியம் 1 மணி வரை குண்டம் இறங்கியது. கால் நடைகளுடன் விவசாயிகள் தீ மிதித்த காட்சியும் பரவசத்தை ஏற்படுத்தியது.



    குண்டம் விழாவில் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் கரூர், திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ் நகர், நஞ்சன் கூடு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு குண்டம் இறங்கி பண்ணாரி அம்மனை வழிபட்டனர்.



    பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் மேற் பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பக்தர்கள் குண்டத்தில் இறங்கிய போது கருவறையில் பண்ணாரியம்மன் வீணை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    நாளை (புதன்கிழமை) மதியம் மாவிளக்கு பூஜையும், இரவு புஷ்ப ரத ஊர்வலமும் நடக்கிறது. 17-ந்தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம், அடுத்த நஞ்சை புளியம்பட்டி, பரிசல் துறை வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது47). இவரது மனைவி சுமதி. சுமதி உடல் நலம் சரியில்லாமல் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்துவிட்டார். சக்திவேல் சமையல் வேலை பார்த்து வந்தார். அப்போது கடம்பூரை சேர்ந்த ஜோதி என்று பெண்ணுடன் சக்திவேலுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் நஞ்சை புளியம்பட்டி, பரிசல்துறை வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சக்திவேலும், ஜோதியும் குடியிருந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஜோதி சக்திவேலுடன் சண்டைபோட்டு கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார்.

    இதனால் சக்திவேல் மனவேதனையுடன் இருந்தார். சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட நேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து வீட்டின் உரிமையாளர் தங்கமணி சக்திவேல் வீட்டின் கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் வரவில்லை.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவ்ல தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சக்திவேல் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    எதிர்காலத்தில் பணம் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஈஸ்வரன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    பணப்பட்டுவாடா நடை பெற்றது உறுதி செய்யப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்வதாக அறிவித்தது.

    இது குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் இந்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்லை ரத்து செய்துள்ளது. இது ஓட்டு மொத்த தமிழகத்திற்கே தலைக்குனிவு.

    உலக மக்களிடம் தமிழர்கள் என்றாலே பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்கள் என்ற நிலையை உருவாக்கி விடும்.

    ஏற்கனவே இது போன்று அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலின் போது இதே காரணத்திற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அங்கு தேர்தல் நடந்தது. அப்போதும் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறப்படுகிறது.

    தேர்தலை ரத்து செய்தால் மட்டும் இதற்கு தீர்வு கிடைக்க போவதில்லை. மீண்டும் தேர்தல் நடந்தால் இதே நிலை தான் நீடிக்கும். எனவே தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா நடந்தால் அதை எப்படி தடுக்க போகிறோம் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தி அதை விளக்க வேண்டும்.

    எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இது குறித்து மக்களிடம் எழுச்சி இல்லை.

    தமிழக விவசாயிகள் போராட்டம் தமிழக விவசாயிகளுக்காக மட்டும் இல்லை. இந்திய விவசாயிகள் சார்பாகவும் தான் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இளைஞர்களும், மாணவர்களும், பொது மக்களும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது . இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

    ஈரோடு:

    ஏசு கிறிஸ்து இறை பணியை தொடங்குவதற்கு முன்பு 40நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது .

    இதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் கடந்த 1-ந்தேதி முதல் 40 நாட்கள் தவக்காலத்தை தொடங்கி உள்ளார்கள். இந்த தவக்காலம் நிகழ்ச்சி வருகிற (ஞாயிற்றுக்கிழமை) 16-ந்தேதி முடிவடைகிறது.

    இந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கிறார்ள்.

    இதையொட்டி இன்று காலை ஈரோடு மாவட்டத் தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது .

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலைகளுடன் கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலங்களிலும் இன்று காலை விசே‌ஷ பிரார்த்தனை நடந்தது .

    ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே உள்ள சி.எஸ். ஐ. கிறிஸ்தவ ஆலயம், ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள அமன அன்னை கிறிஸ்தவ ஆலயம், ரெயில்வே காலனியில் உள்ள இருதய ஆண்டவர் கிறிஸ்தவர் ஆலயம் மற்றும் திருநகர் காலனி, பொய அக்ரகாரம், சூளை உள்படபல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் மற்றும் கோபி,சத்தியமங்கலம், பெருந்துறை,அந்தியூர், பவானி, கவுந்தப்பாடி, பு.புளியம்பட்டி, ஆப்பக் கூடல், கொடுமுடி, அரச்சலூர், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று காலை குருத்தோலை ஞாயிறு ஊர்வலம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா அதிகளவில் நடந்துள்ளது. இருந்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும் என ஈஸ்வரன் கூறினார்.

    பீளமேடு:

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா அதிகளவில் நடந்துள்ளது. இருந்தாலும் இந்த தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    சுப்ரீம் கோர்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மது கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் கொண்டு வர முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளை மாற்றும் முடிவையும் கண்டிக்கிறோம்.

    தென் இந்தியர்களை பற்றி தருண் விஜய் எம்.பி. யும், தேச துரோகிகள் என்று எச்.ராஜாவும் கூறியது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நைக மற்றும் ரூ.2 லட்சத்தை அள்ளிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது47). இவரது கணவர் பழனிசாமி. உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும், மோகனா என்ற மகளும் உள்ளனர்.

    இதில் விக்னேஷ் கடந்த ஒரு வருடத்துக்கு முன் இறந்து விட்டார். மகள் மோகனா திருமணமாகி நாமக்கல் மாவட்டத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

    சாந்தி ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்துக்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து நேதாஜி மார்க்கெட்டுக்கு செல்வது வழக்கம்.

    அதே போன்று இன்று வழக்கம் போல் சாந்தி வியாபாரத்துக்காக நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாந்தியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவையும் உடைத்து அதில் இருந்த 80 பவுன் நகை மற்றும் 2 லட்சத்தை அள்ளி சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

    இது பற்றி தகவல் கிடைத்தவுடன் தனது வீட்டுக்கு அலறி அடித்து கொண்டு ஓடி வந்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடைப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து சோதனையிட்டு வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 80 பவுன் நகையும், ரூ.2 லட்சம் பணமும் திருட்டு போய் இருப்பது தெரிய வருகிறது. முழுமையான தகவல் இன்னும் தெரியவில்லை.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வீடுகள் நிறைந்த இந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு லாட்ஜில் கோவை டி.வி.ஷோரூம் உரிமையாளர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    கோவை கருப்பையா வீதியை சேர்ந்தவர் சரவண குமார்(வயது43). இவரது மனைவி ராஜலட்சுமி. கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

    சரவணகுமார் கோவையில் டி.வி.ஷோரூம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சரவண குமார் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று சரவணகுமார் தனது அண்ணன் குட்டியுடன் ஈரோட்டுக்கு வந்தார். அங்குள்ள தனியார் லாட்ஜில் சரவணகுமாரும், அவரது அண்ணன் குட்டியும் தனித்தனி அறைகள் எடுத்து தங்கினர்.

    குட்டி சாப்பிடுவதற்காக தனது தம்பி அறை கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குட்டி லாட்ஜ் ஊழியர்களிடம் தெரிவித்தார்.

    அவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சரவணகுமார் தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அங்கு சரவணகுமார் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் சரவணகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சரவணகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. எனினும் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு பஸ் நிலைய அருகே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள சுவஸ்திக் கார்னர் அருகில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பணம் எடுத்து கொண்டு இருந்தார்.

    அப்போது ஏ.டி.எம்.அருகே 2 வாலிபர்கள் வந்தனர். அக்கம் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? என்று நோட்டமிட்டு திடீரென அந்த மையத்துக்குள் புகுந்தனர்.

    அங்கு பணம் எடுத்து கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்.

    இந்த சம்பவத்தை அங்கு பணம் எடுக்க வந்த மக்கள் பார்த்து விட்டு அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட மற்றொரு வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.

    இதுப்பற்றி வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்டனர்.

    போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஹரி (வயது30) என தெரியவந்தது. தப்பிய ஓடிய வாலிபர் ஹரியின் நண்பர் என கூறப்படுகிறது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சத்தியமங்கலத்தில் இன்று டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    சத்தியமங்கலம்:

    டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியினரும் பல்வேறு இயக்கத்தினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    பவானியில் கொ.ம.தே.க.சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் சத்தியமங்கலத்தில் இன்று டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    இதையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் கடைவீதி, அத்தாணி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

    மாலை 5 மணி வரை கடைகள் மூடப்பட்டிருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் மற்றும் பல்வேறு இயக்கத்தினர் இன்று சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் அறிவித்திருந்தனர்.

    இதையொட்டி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடையை மீறி மறியல் நடத்துபவர்கள் கைது செய்யக்கூடும் என்பதால் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் பழனிக்கு பாதயாத்திரை சென்ற வழியில் கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொடுமுடி:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த பாகாநத்தம் குண்டாம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவகுமார்(வயது21). சிவகுமாரும் அவரது உறவினர்களும் மற்றும் ஊர்க்காரர்கள் சிலரும் பழனிக்கு பாதயாத்திரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    இவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது கொடுமுடி மணல்மேடு காவிரி ஆற்றில் உள்ள அகத்தியர்பாறை அருகே சிவக்குமாரும், அவரது உறவினர்களும் குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது சிவக்குமாருக்கு திடீரென ஜன்னி ஏற்பட்டு நீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் உறவினர்கள் மற்றும் அங்கு குளித்து கொண்டிருந்த சிலரும் வேகமாக நீந்தி சென்று சிவக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு சிவக்குமார் உறவினர்களும், ஊர்க்காரர்களும் கதறி அழுதனர்.

    இது குறித்து கொமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பாதயாத்திரைக்கு வந்த இடத்தில் வாலிபர் உறவினர்கள் கண்முன்னே ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×