search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைவாய்ப்பு திருவிழா - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    வேலைவாய்ப்பு திருவிழா - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • மாநகராட்சி, வேலை வாய்ப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    • முகாம் குறித்து பொதுமக்கள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி, வேலை வாய்ப்புத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் பங்கேற்க பதிவு செய்துள்ள நிறுவனங்கள், விண்ணப்பதாரர்கள், வேலை வாய்ப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முகாமில் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். முகாம் நடைபெறும் கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், துறை வாரியாக ஊழியர்கள் பங்களிப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முகாம் குறித்து பொதுமக்கள் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- திருப்பூர் பகுதியில் குறை கேட்பு கூட்டத்தின் போது பல தரப்பினரும் வீடு, மனைப்பட்டா, வேலை வாய்ப்பு என கேட்டு மனு அளிக்கின்றனர். ஏறத்தாழ 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வேலை கேட்டு வந்துள்ளது.

    இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த வேலை வாய்ப்பு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இதில் பங்கேற்கவுள்ளன. இந்நிறுவனங்கள் 26 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளன. இன்னும் கூடுதலான நிறுவனங்கள் பங்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    நேற்று வரை 4,500 பேர் வரை முகாமில் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒரு லட்சம் பேருக்கு மேல் இதில் பங்கேற்க வைக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த முகாம் மாநில அளவில் சாதனை படைக்கும் விதமாக அமைய வேண்டும்.

    ேவலை தரும் நிறுவனங்களும், வேலை தேடி வருவோரும் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொண்டு பயன் பெறும் விதமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வேலை வாய்ப்புக்கு வருவோர் தங்கள் திறனை வளர்த்து கொள்ளும் விதமாக இம்முகாமில் பயிற்சி அரங்கும் அமைத்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலைவாய்ப்பு திருவிழாவில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 800க்கும் மேற்பட்ட 34 துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற வேலை வாய்ப்பினை வழங்கவுள்ளன.திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களை சேர்ந்த வேலை வாய்ப்பு தேடுவோரும் இதில் பங்கேற்க வைக்கும் விதமாக இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவ்வகையில் கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இந்த முகாம் குறித்த விளம்பர போஸ்டர் மற்றும் அறிக்கைகள் காட்சிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் இது குறித்து அறிவிக்கும் வகையில் அனைத்து வார்டிலும் வாகன பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறும் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் நிறுவனங்களுக்கான அரங்குகள் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் இப்பணிகளை பார்வையிட்டனர். அரங்குகள் அமைவிடம், விண்ணப்பதாரர் வந்து செல்லும் வழி, வாகன பார்க்கிங், குடிநீர், கழிப்பிட வசதி ஆகியன குறித்தும் உரிய ஏற்பாடுகள் செய்வது குறித்து அறிவுறுத்தினர்.

    Next Story
    ×