என் மலர்
உள்ளூர் செய்திகள்

சித்தோடு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு
- முத்துசாமி குளித்துக்கொண்டிருந்தபோது அருகில் தொங்கிய மின் ஒயரை கையால் அப்புறப்படுத்தியுள்ளார்.
- அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துசாமி உயிரிழந்தார்.
சித்தோடு:
சித்தோடு அருகே உள்ள ஆட்டையாம்பாளையம், கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி (77). இவரது மனைவி அன்ன பூரணி(57). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களது வீட்டுக்கு அருகில் அவர்களது மகன் செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டுக்கு, முத்துசாமியின் வீட்டில் இருந்து தற்காலிகமாக மின் இணைப்பு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துசாமி குளித்துக்கொண்டிருந்தபோது அருகில் தொங்கிய மின் ஒயரை கையால் அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி அன்னபூரணி அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






