என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை, பணம் கொள்ளை
- தரும்புரி அருகே மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை,பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றார்.
- தொடரும் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி சின்னகண்ணு(70) இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் வேறு வேறு இடங்களில் தனித்தனியே இருந்து வருகின்றனர். கணவன் இல்லாத நிலையில் மூதாட்டி மட்டும் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு 9 ந்தேதி ரேசன் கடைக்கு சென்றிருந்த மூதாட்டி சின்னகண்ணுவை சந்தித்த மர்ம நபர் ஒருவர் உறவினர் என கூறிக்கொண்டு மூதாட்டியிடம், நிலம் சம்மந்தமான வேலையாக ஊருக்கு வந்திருப்பதாகவும், பசிக்கிறது சாப்பிட எதாவது கொடுங்கள் என கூறியுள்ளார். இதனை நம்பி ரேசன் கடையிலிருந்து மூதாட்டி சின்னகண்ணு தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் நைசாக பேசி மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். அதனை வாங்கி குடித்த மூதாட்டி மயக்கம் அடைந்துள்ளார்.. இதனையடுத்து மூதாட்டி அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க நகைகள், வீட்டிலிருந்த பணத்தையும் சுருட்டி கொண்டு மயங்கி கிடந்த மூதாட்டியை வீட்டிற்குள்ளயே படுக்க வைத்து விட்டு வீட்டின் கதவினை வெளிபக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு அங்கிருந்து அந்த நபர் சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது மயங்கி கிடப்பதை அறிந்து உறவினர்களுக்கு தகவல் அளித்து அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
இது குறித்து சின்னகண்ணுவின் மகன் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவரது வீட்டில், தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த ஆப்பிள் பழத்தை சாப்பிட வைத்து, 40 பவுன் நகைகளை காரில் வந்த பெண் ஒருவர் கொள்ளையடித்து சென்றார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,தனியாக வசித்து வரும் மூதாட்டியியை நோட்டமிட்டு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க வைத்து நகை, பணத்தை கொள்ளையடித்திருக்கின்ற சம்பவம் பாப்பாரப்பட்டி பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






