என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடிக்கு மருந்து இருப்பு உள்ளதா? துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. ஆய்வு
- ஒருசில மருந்து மாத்திரை போதிய அளவு இருப்பு இல்லை என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூறினர்.
- இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு தேவையான டாக்டர் மற்றும் நர்ஸ் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதி
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி எஸ்.பி.கோவில் தெருவில் இம்மாதம் 5-ம் தேதி பாம்பு கடித்து பள்ளி மாணவர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்கள்.
இந்நிலையில், ஆரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடி மற்றும் நாய் கடிக்கு (ஊசி) மருந்து இருப்பு இல்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து இந்த மருத்துவமனையில் பொன்னேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் திடீரென ஆய்வு செய்தார். மேலும், பாம்பு கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு போதிய மருந்து உள்ளதா? என விசாரித்தார்.
அப்போது இரவு நேரங்களில் மருத்துவர் மற்றும் நர்ஸ் இல்லை என்றும் ஒருசில மருந்து மாத்திரை போதிய அளவு இருப்பு இல்லை என்றும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூறினர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி போதிய அளவு மருந்து, மாத்திரை இருப்பு வைக்கவும், இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்கு தேவையான டாக்டர் மற்றும் நர்ஸ் பணியாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக பணியில் இருந்த டாக்டர் திலகிடம் எம்.எல்.ஏ உறுதி கூறினார்.
இந்த ஆய்வின்போது பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் சுகுமார், ஆரணி பேரூர் திமுக செயலாளர் முத்து, நியமன குழு உறுப்பினர் கண்ணதாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.







