என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே சாக்கரை ஏரி நிரம்பியதால் வெள்ளத்தில் சிக்கிய கட்டிட தொழிலாளிகள் 8 பேர் மீட்பு
- ஓசூர் அருகேயுள்ள சாக்கரை ஏரி மழை நீரால் முழுவதுமாக நிரம்பியது.
- ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர் 8 பேர் தங்கியிருந்த பகுதியிலும் சூழ்ந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல ஓசூர் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஓசூர் அருகேயுள்ள சாக்கரை ஏரி மழை நீரால் முழுவதுமாக நிரம்பியது.
இதனால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வயல்களிலும், குடியிருப்பு பகுதியிலும் புகுந்தது.
இப்பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபடுவதற்காக பெண்கள் உள்ளிட்ட 8 பேர் வெளியூரிலிருந்து வந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஏரியிலிருந்து வெளியேறிய தண்ணீர் இவர்கள் தங்கியிருந்த பகுதியிலும் சூழ்ந்தது.
இது பற்றிய தகவல் அறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கயிறுகள் கட்டியும், மிதவை மூலமும் கட்டிட தொழிலாளிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீர் மேலும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை மூழ்கடிக்கும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.






