search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து கைவரிசை காட்டிய கொள்ளையன்... வீட்டுக்குள் மறைந்து இருந்து மடக்கி பிடித்த டிரைவர்
    X

    தொடர்ந்து கைவரிசை காட்டிய கொள்ளையன்... வீட்டுக்குள் மறைந்து இருந்து மடக்கி பிடித்த டிரைவர்

    • நல்லசிவம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதும் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக திறந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார்.
    • கைதான கொள்ளையன் மணிகண்டன் நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி பணத்தை சுருட்டியதாக தெரிவித்து உள்ளார்.

    போரூர்:

    சென்னை ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் நல்லசிவம். கார் டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார் . பின்னர் இரவு வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த ரூ.5ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.

    இதேபோல் அடுத்தடுத்து 3 முறை வீட்டில் இருந்த பணம் கொள்ளை போனது. ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. அப்படியே இருந்தது. வீட்டில் இருந்து ஆட்கள் வெளியே சென்றதும் நோட்டமிட்டு மர்மநபர் கைவரிசை காட்டி வருவது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நல்லசிவம் லாவகமாக கைவரிசை காட்டிவரும் கொள்ளையனை எப்படியாவது மடக்கி பிடித்து விட வேண்டும் என்று எண்ணினார். இதுபற்றி மனைவியிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து கொள்ளையனை எப்படி பிடிக்கலாம் என்று திட்டமிட்டனர்.

    இருவரின் யோசனைப்படி சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டிற்குள் மறைந்து இருந்து கொண்டு மனைவியை வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே செல்லுமாறு கூறினார்.

    அதன்படி வழக்கம்போல் நல்லசிவத்தின் மனைவி வீட்டு கதவை பூட்டிவிட்டு எதுவும் தெரியாதது போல வெளியே சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக திறந்து உள்ளே சென்றார்.

    அப்போது வீட்டுக்குள் மறைந்து இருந்த நல்லசிவம், கொள்ளையன் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்கு உரிமையாளர் மறைந்து இருப்பதை கண்ட கொள்ளையன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றான்.

    பல நாள் திருடன் சிக்கியதால் ஆவேசம் அடைந்த நல்லசிவம் பாய்ந்து சென்று கொள்ளையைனை மடக்கி பிடித்தார். பின்னர் அவனுக்கு தர்ம அடி கொடுத்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.

    தொடர்ந்து கைவரிசை காட்டிய வந்த கொள்ளையனுக்கு அவர்களும் தங்கள் பங்குக்கு கவனித்தனர். பின்னர் அவனை ராமாபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் நடத்திய விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிகண்டன் (26) என்பது தெரிந்தது. இளநீர் வியாபாரம் செய்து வந்த அவன் உல்லாசமாக செலவு செய்ய கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    நல்லசிவம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றதும் மணிகண்டன் வீட்டின் பூட்டை உடைக்காமல் லாவகமாக திறந்து கைவரிசை காட்டி வந்து உள்ளார். முதலில் வீட்டில் இருந்த பணம் மாயமானதால் நல்லசிவமும் அவரது மனைவியும் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் அடைந்தனர்.

    இதன் பின்னர் தொடர்ந்து பணம் மாயமானதால் வெளியில் இருந்து வரும் மர்ம நபர்கள் நூதன முறையில் கைவரிசை காட்டி பணத்தை திருடி செல்வது தெரியவந்தது. இதன் பின்னரே கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையனை மடக்கி பிடித்து உள்ளனர்.

    கைதான கொள்ளையன் மணிகண்டன் நல்லசிவம் வீட்டில் 3 முறை கைவரிசை காட்டி பணத்தை சுருட்டியதாக தெரிவித்து உள்ளார். மேலும் திருடிய பணத்தை வைத்து புதிய செல்போன் வாங்கியதும், உல்லாசமாக செலவு செய்ததாகவும் தெரிவித்து உள்ளான்.

    வீட்டுக்குள் நல்லசிவம் மறைந்து இருப்பது தெரியாமல் வழக்கம்போல் மணிகண்டன் உற்சாகமாக பணத்தை சுருட்ட வந்தபோது வசமாக சிக்கிக்கொண்டான்.

    இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்த ரூ.2ஆயிரம் ரொக்கம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×