search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்ச்சை கருத்து கூறிய டாக்டர் ஷர்மிகாவிடம் அதிகாரிகள் விசாரணை- எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு
    X

    சர்ச்சை கருத்து கூறிய டாக்டர் ஷர்மிகாவிடம் அதிகாரிகள் விசாரணை- எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு

    • புகாரை படித்து பார்த்த ஷர்மிகா, சில விளக்கங்களை அளித்தார்.
    • ஷர்மிகா தனது தரப்பு விளக்கத்தை அளித்த பின்பு அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    'மருத்துவ டிப்ஸ்' என்ற பெயரில் சித்தா டாக்டர் ஷர்மிகா 'யூடியூப்'பில் பேசி வருகிறார்.

    நுங்கு சாப்பிட்டால் மார்பகங்கள் பெரிதாகும், குப்புறப்படுத்தால் மார்பக புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் பல நோய்கள் வரும், ஒரு 'குலாப் ஜாமுன்' சாப்பிட்டால் 3 கிலோ எடை கூடும் என பல்வேறு சர்ச்சை கருத்துகளை அவர் 'யூடியூப்'பில் கூறி வந்தார்.

    மருத்துவ நடைமுறைக்கு ஒத்துவராத, தவறான தகவல்களை மக்கள் மத்தியில் 'யூடியூப்' மூலம் டாக்டர் ஷர்மிகா கூறி வருவதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் சித்த மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பினர்.

    டாக்டர் ஷர்மிகாவின் சர்ச்சை பேச்சுகள் அடங்கிய வீடியோக்களையும் அந்த புகாருடன் அனுப்பி இருந்தனர். இந்த புகாரை பரிசீலித்த இந்திய மருத்துவ இயக்குனரகம் இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவ இயக்குனரகத்தில் டாக்டர் ஷர்மிகா நேற்று நேரில் ஆஜரானார்.

    இந்திய மருத்துவ இயக்குனர் எஸ்.கணேஷ் தலைமையில் இணை இயக்குனர் பார்த்திபன், சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் கனகவல்லி, மாநில மருந்து அலுவலர் (இந்திய மருத்துவம்) ஒய்.ஆர்.மானக்சா, சென்னை மருந்து ஆய்வாளர் சுசி கண்ணம்மா ஆகியோர் அடங்கிய குழு ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தியது.

    அப்போது மருத்துவம் தொடர்பான சர்ச்சை கருத்துகள் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதேபோன்று புகார் குறித்த நகல்களும் அவருக்கு அளிக்கப்பட்டன. புகாரை படித்து பார்த்த ஷர்மிகா, சில விளக்கங்களை அளித்தார். இதனை அதிகாரிகள் குழு பதிவு செய்து கொண்டது.

    அதே வேளையில் தனது விளக்கத்தை பிப்ரவரி 10-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் அதிகாரிகள் குழு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஷர்மிகா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இந்த விசாரணை குறித்து இந்திய மருத்துவ இயக்குனர் எஸ்.கணேஷ் கூறும்போது, 'டாக்டர் ஷர்மிகா மீதான புகார் தொடர்பாக அதிகாரிகள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். இருந்தபோதிலும் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளோம்.

    ஷர்மிகா தனது தரப்பு விளக்கத்தை அளித்த பின்பு அதனை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

    Next Story
    ×