search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாயிலேயே வடை சுட்டு காசாக்குவதுதான் தி.மு.க.வின் வேலை
    X

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசிய காட்சி.

    வாயிலேயே வடை சுட்டு காசாக்குவதுதான் தி.மு.க.வின் வேலை

    • பா.ஜ.க வின் கொள்கைகளால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கூட்டணியை விட்டு வெளியே வந்து நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தயாராகி வருகிறோம்.
    • எதற்கெடுத்தாலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றுகிறார்.

    நத்தம்:

    நத்தம் அருகே கோபால்பட்டியில் உள்ள எம்.ஜி.ஆர்.திடலில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராசு தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கண்ணன் வரவேற்று பேசினார்.

    இதில் ஒன்றிய செயலாளர்கள் சின்னு, சுப்பிரமணி, மணிகண்டன், முருகன், பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் இளம்வழுதி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஹரிஹரன், ரமேஷ்பாபு, ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், சேகர், நகர பேரவை செயலாளர் சேக்தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:-

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. வைத்த கூட்டணி தேர்தல் கூட்டணி மட்டுமே. கொள்கை கூட்டணி அல்ல. பா.ஜ.க வின் கொள்கைகளால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் கூட்டணியை விட்டு வெளியே வந்து நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தயாராகி வருகிறோம்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு கவர்னர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் வெடிகுண்டே சாட்சி. கவர்னரின் செயல்பாட்டில் மாற்று கருத்து இருந்தாலும் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்கெடுத்தாலும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் என வார்த்தை ஜாலத்தால் ஏமாற்றுகிறார்.

    தி.மு.க.தேர்தல் நேரத்தில் 520- க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கூறி அதில் 99 சதவீதத்தை நிறைவேற்றியதாக மக்களை ஏமாற்றி வருகிறது. இது போன்ற பித்தலாட்ட அரசியல் செய்வதற்கு பெயர் தான் தி.மு.க. திராவிட மாடல் ஆட்சியா? எண்ணற்ற வாக்குறுதிகளை கூறி அதனை நிறைவேற்றாமல் நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக அரசு ஊழியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் இன்று ஆளும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியினால் பயன்பெற்றவர்கள் செல்லிங் எனும் சட்ட விரோத சாராயம் விற்பவர்களும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களும் மட்டுமே. இது போன்ற மக்கள் விரோத ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. இதனால் மக்கள் தற்போது கடும் கோபத்தில் இந்த ஆட்சி மீது உள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என சொல்லிவிட்டு இப்போது 50 லட்சம் கையெழுத்து இயக்கம் என தமிழ்நாட்டை ஏமாற்றுகின்றனர்.

    தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும் சேர்ந்து தான் இந்த நீட் தேர்வையே கொண்டு வந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே நாளில் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிவிட்டு, தற்போது நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்று மக்களை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வந்து விட்டு, பின் அவர்களே இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக கூறி ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? இதே போல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு, மீண்டும் அதனை மீட்பதாக கூறுகின்றனர். இது போல் பொய்யான வாக்குறுதிகளை கூறி வாயிலேயே வடை சுட்டு அதை காசாக்குவதுதான் தி.மு.க.வின் வேலை. இந்தத் திறமை யாருக்கும் வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பேச்சாளர்கள் அழகு, நடராஜன், சேகர், ஒன்றிய அவைத்தலைவர் பிறவிக் கவுண்டர், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக் கவுண்டர், பார்வதி, நகர அவைத்தலைவர் சேக்ஒலி, ஒன்றிய அவைத் தலைவர் அப்துல்ரஷீது, எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஆசை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் சவரிமுத்து, நத்தம் வார்டு கவுன்சிலர்கள் சிவா, உமா மகேஸ்வரி, சுமதி செந்தில் குமார், விஜயவீரன், விவசாயப்பிரிவு இணைச்செயலாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் துணைச் செயலாளர் ராமநாதன், அம்சவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×