என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றி சென்ற 108 ஆம்புலன்ஸ் ரெயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை காணலாம்.
புட்டிரெட்டிபட்டி ரெயில்வே கேட்டால் தொடரும் சிரமங்கள்: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- பகல் இரவு நேரங்களில் அடிக்கடி கேட் மூடப்படுவதால்,15 கிலோமீட்டருக்கு மேலாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது.
- தாளநத்தம் பகுதியை மையமாக கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி, ஆகிய இரண்டு ஊராட்சிகளில் அய்யம்பட்டி, காவேரிபுரம், நொச்சிகுட்டை, வேப்பிலை பட்டி உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.இதில்10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.இங்குள்ள கர்ப்பிணிபெண்கள், தங்களுக்கான மருத்துவ சிகிச்சை பெற பொம்மிடி,ராமியம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.
இந்தகிராம பகுதியில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மருத்துவ மனைகளுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாத நிலை உள்ளது.பைக், கார், டிராக்டர் மூலம் தான் செல்ல வேண்டும்.மேல் சிகிச்சைக்காக தருமபுரிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்ல நேரிடும் போது புட்டிரெட்டிப்பட்டி ரெ யில்வே ஸ்டேஷனில் பகல் இரவு நேரங்களில் அடிக்கடி கேட் மூடப்படுவதால்,15 கிலோமீட்டருக்கு மேலாக சுற்றி செல்ல வேண்டி உள்ளது. அதற்குள் நோயாளி உயிரிழக்கும் சூழல் உள்ளது.
இதனால் தாளநத்தம் பகுதியை மையமாக கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.ஆனால் மருத்துவ துறை சார்ந்த அதிகாரிகள் இப்பகுதி மக்களின் கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர். கடந்த தேர்தலின் போது தி.மு.க. இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது.ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்கும் மூடப்பட்டு விட்டதாக வும்,மருத்துவ சிகிச்சைக்கு இப்பகுதி மக்கள் அலையும் அவலம் தொடர்ந்து வருகிறது எனவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.






