என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமா? -நடுத்தர மக்கள் எதிர்பார்ப்பு
- 10 லட்சம் மக்கள் உள் நோயாளி களாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைப்பெறுகிறார்கள்.
- பே -வார்டு என்ற திட்டத்தை சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியது.
தருமபுரி,
தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இந்த மருத்துவ மனைகளில் தினமும் சுமார் 10 லட்சம் மக்கள் உள் நோயாளி களாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைப்பெறுகிறார்கள்.
தற்போது தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத அளவுக்கு அதிநுட்பமான அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் செய்யப்படுகின்றன. அதனால், தற்போது அரசு மருத்துவமனைகள் கோடிக்கணக்கான மக்க ளுக்கு நம்பிக்கையாகவும், உயிராதாரமாகவும் திகழ்கின்றன.
இருப்பினும் அரசு மருத்துவமனை வார்டுகள், தனியார் மருத்துவமனைகள் போல் பராமரிக்கப்படாததால் அங்கு நிலவும் சுகாதாரச் சூழலால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைப் பெற வருவதற்கு தயங்குகின்றனர்.
ஆனால் அவர்கள் தனியார் மருத்து வமனைகளில் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். எனவே அனைத்து தரப்பு மக்களையும் அரசு மருத்துவமனைக்கு வர வைக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனியாரை போல் நோயாளிகள் கட்டணம் கட்டி அதன் அடிப்படையில் சிகிச்சைப்பெறுவதற்கு பே -வார்டு என்ற திட்டத்தை சுகாதாரத் துறை அறிமுகப்படுத்தியது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இத்திட்டம் அறிமு கப்படுத்தப்பட்டு பெருத்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து மதுரை ,சேலம், கோவை மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த பே -வார்டுகள் உருவாக்கப்பட திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொறுத்தவரை இந்த மாவட்டம் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும் பயன் தரும் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
புற்றீசல் போல தனியார் மருத்துவமனைகள் பெருகி வரும் சூழலில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இதுபோல பே -வார்டு அமைக்கப்படுமா என்பதே நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






