search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் ருசிகரம்:  மோட்டார் சைக்கிளை வாங்கிச்செல்ல 10 ரூபாய் நாணயங்களை பைகளில் கட்டிக் கொண்டு ஷோரூமிற்கு வந்த இளைஞர்
    X

    ஓசூரில் ருசிகரம்: மோட்டார் சைக்கிளை வாங்கிச்செல்ல 10 ரூபாய் நாணயங்களை பைகளில் கட்டிக் கொண்டு ஷோரூமிற்கு வந்த இளைஞர்

    • அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்தார்.
    • 10 ரூபாய் நாணயங்களை தரையில் பரப்பி, எண்ணும் பணியில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ் (30). இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

    இவர் நீண்ட நாட்களாக, புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பினார். இந்த நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் பேருந்துகளில் வாங்க மறுப்பதால், அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை செல்லுபடியாக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன், தான் விரும்பும் மோட்டார் சைக்கிளுக்கான தொகையை 10 ரூபாய் நாணயமாக வழங்கித்தான் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார். இதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக நண்பர்கள் சாதிக், யுவராஜ் ஆகியோருடன் மாவட்டம் முழுவதும் அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்தார்.

    பின்னர் நேற்று அவற்றை 8 பைகளில் கட்டிக்கொண்டு, ஓசூர் ரிங்ரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் விவரத்தை கூறியதும் அவர்கள் வியப்படைந்தனர். மேலும் அவர்கள் நாணயங்களை பெற்றுக் கொண்டு, மோட்டார் சைக்கிளை வழங்கவும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து, பைகளில் இருந்த 10 ரூபாய் நாணயங்களை தரையில் பரப்பி, எண்ணும் பணியில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    3 மணி நேரம் எண்ணப்பட்டு, அதில் தவணைத்தொகை ரூ.1,80,000- இருந்ததையும்,, மீதித்தொகையை லோன் மூலம் வழங்க ராஜீவ் உறுதியளித்ததையும் ஏற்றுக் கொண்டு, ஷோரூம் நிர்வாகத்தினர் புதிய ரக நவீன வடிவமைப்பு கொண்ட மோட்டார் சைக்கிளை அவரிடம் ஒப்படைத்தனர். அதனை பெற்றுக்கொண்டு ராஜீவ் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார். இந்த ருசிகர சம்பவத்தால் ஷோரூம் பகுதியில் கலகலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

    Next Story
    ×