search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலைச்சாலையில் மரண பீதி மாணிக்கம் பட பாணியில்   பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பஸ்
    X

    பஸ்சின் முன்பகுதியிலும், டிரைவருக்கு அருகிலும் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள்.

    மலைச்சாலையில் மரண பீதி மாணிக்கம் பட பாணியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பஸ்

    • தடியன்குடிசையில் இருந்து கருப்புச்சாமி கோவில் செல்லும் சாலைவரை ஆபத்தான கொண்டைஊசி வளைவுகள் உள்ளன
    • கூட்டம் அதிகரிக்கும் போது டிரைவர் இருக்கையின் அருகிலும், அவரை சுற்றிலும் பயணிகள் அமர்ந்து கொள்வதோடு படிக்கட்டில் நின்றபடியும் பயணம் செய்வது நடந்து வருகிறது

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் இருந்து சித்தூர், சித்தரேவு, பெரும்பாறை, தடியன்குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி வழியாக ஆடலூருக்கு தினசரி காலையில் 7.15 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்சில் தான் மலை தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பயணம் செய்கின்றனர். ஒருநாள் இந்த பஸ் வராவிட்டாலும் இவர்கள் அன்றாட பணிக்கு செல்வது சிரமமாகிவிடும். இதனால் இந்த பஸ்சில் எப்போதும் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

    இதேபோல் மாலையில் இந்த பஸ்சிலேயே வீடுகளுக்கு திரும்புகின்றனர். குறிப்பாக தடியன்குடிசையில் இருந்து கருப்புச்சாமி கோவில் செல்லும் சாலைவரை ஆபத்தான கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த பாதையில் அனுபவம் மிகுந்த டிரைவர்களால் மட்டுமே பாதுகாப்பாக பஸ்சை இயக்க முடியும்.

    இந்நிலையில் கூட்டம் அதிகரிக்கும் போது டிரைவர் இருக்கையின் அருகிலும், அவரை சுற்றிலும் பயணிகள் அமர்ந்து கொள்வதோடு படிக்கட்டில் நின்றபடியும் பயணம் செய்வது நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் ஓட்டை உடைசலாக இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் அடிக்கடி நடுவழியில் பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றுவிடுவதும், மழைக்காலங்களில் குடைபிடித்தபடி பஸ்சுக்குள் பயணம் செய்யும் நிலையும் உள்ளது.

    இந்நிலையில் ஆபத்தான முறையில் அதிக அளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைச்சாலையில் பயணிகள் செல்வதால் அவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பல நாட்களில் மாணிக்கம் சினிமா படத்தில் வரும் காட்சியைப் போல பயணிகள் மூச்சுவிடக்கூட முடியாத நிலையில் பயணிக்கும் நிலை உள்ளது.

    இதனால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சை தரமானதாக ஒதுக்கவேண்டும். மேலும் காலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×