என் மலர்
கடலூர்
பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:–
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை ராம்குமார் பேஸ்புக்கில் சுவாதியை ஒருதலையாக காதலித்ததாக எந்த தகவலும் இல்லை.
போலீசாரின் விசாரணையில் முரண்பாடு உள்ளது. கொலை வழக்கில் பின்னணியில் உள்ள உண்மைகளை போலீசார் மூடி மறைக்கின்றனர். தமிழக போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
இந்த கொலை தொடர் பாக பிலால் மாலிக்கையும் விசாரணை நடத்த வேண்டும்.
நடைபெறஇருக்கும் உள்ளாட்சி தேர்தலில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னையில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மக்கள் நல கூட்டணி சார்பில் நாளை ஒன்று கூடி முக்கிய முடிவு எடுக்கப்படும். இதில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்துவதற்காக வருகிற ஆகஸ்டு 1–ந் தேதி முதல் 10–ந் தேதி வரை வடமாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேர்களை தேடி பயணம் நடைபெறும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. காவல் துறை செயலிந்து உள்ளது. பெரும்பாலான நேரங்களில் ஆளுங்கட்சிக்கு சேவகம் செய்வதற்கே காவல்துறையினருக்கு நேரம் சரியாக உள்ளது. தமிழ்நாட்டின் தலை நகரில் கஞ்சா சாக்லேட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மூலம் நாட்டையே காவி மயமாக்கல் நடக்கிறது. சமஸ்கிருதத்தை திணிப்பதை கைவிட வேண்டும். சமீபத்தில் நடந்த விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் மதவாத சக்திகளுக்கு எதிரான ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்போது, பண்ருட்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, நடிகர் நெப்போலியன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு பண்ருட்டி 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 13-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டாக்டர் ராமதாஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி சரவணபாபு 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், நெப்போலியன் உள்பட 7 பேரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை 10.20 மணி அளவில் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜரானார். அப்போது விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் பண்ருட்டி கோர்ட்டு முன்பு திரண்டனர். இதனால் பண்ருட்டி கோர்ட்டு வளாகத்திலும், முக்கிய சாலைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோரும் பண்ருட்டி கோர்ட்டில் இன்று ஆஜரானார்கள்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகேயுள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 24). இவரது நண்பர்கள் சந்தோஷ்குமார், பாரத், ராகுல், குணபாரதி, கோபி. இவர்கள் கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான தகடு பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊருக்கு வந்திருந்த ரவிச்சந்திரன் தனது நண்பர்களுடன் வெள்ளிவாரி ஓடை அருகே மரத்தின் அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டியது.
இதில் இடிதாக்கியதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். மற்ற 5 பேரும் காயமடைந்தனர். அந்த பகுதி மக்கள் 5 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆரோவில் போலீசார், வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் காவேரி நகரை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இதையடுத்து அந்த சிறுவனை கடலூர் சாவடியில உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீஸ் ஏட்டு மாரிமுத்து, போலீஸ்காரர் கொடிகாத்தகுமரன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தனர்.
கடலூர் சாவடி சந்திப்பில் வந்தவுடன் அங்குள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போலீசார் இருவரும் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சிறுவனை காணவில்லை.
அவன் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய சிறுவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடலூர்:
வடலூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த காளியப்பன் மகன் காளிதாஸ் (வயது25). இவர் கடந்த 15–7–2010 அன்று கடலூர்–சிதம்பரம் மெயின்ரோட்டில் சீனுவாசபுரம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இது தொடர்பாக காளிதாசின் தாயார் ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் வக்கீல்கள் ராம.ராதாகிருஷ்ணன், ஏ.எஸ்.சந்திர சேகரன் ஆகியோர் கடலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் ஜெயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக 10 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை வட்டி மற்றும் செலவு தொகையுடன் சேர்த்து வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் இதுவரை செலுத்தாததால், தீர்ப்பை நிறைவேற்றக்கோரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனபால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் புதுவையில் இருந்து வேதாரண்யம் சென்று கொண்டு இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு அமீனா ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30), விவசாயி. இவருடைய மனைவி வேம்பு (20).
இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது வேம்பு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். வேம்பு தனது வீட்டில் செல்லமாக நாயை வளர்த்து வந்தார்.
இது கோவிந்தராஜுக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக வேம்புவை அவர் கண்டித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கோவிந்தராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வேம்புவுக்கும், அவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், நாயை எட்டி உதைத்தார். அந்த நாய் கீழே சுருண்டு விழுந்து இறந்தது. பின்னர் கோவிந்தராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.
பாசமாக வளர்த்த நாயை கணவர் கொன்று விட்டதால் வேம்பு மனமுடைந்தார். கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் வீட்டின் மாடிக்கு சென்றார். அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாலையில் கோவிந்தராஜ் வீடு திரும்பினார். மாடிக்குச் சென்ற அவர் மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தூக்கில் இருந்து அவரை கீழே இறக்கி கட்டிலில் படுக்க வைத்தார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கதறி துடித்தார். இனி நாம் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்தார்.
பின்னர் கோவிந்தராஜ் மனைவி தூக்குப்போட்ட அதே கயிற்றில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ், வேம்பு தம்பதியரின் உடல்களை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான 2 ஆண்டுகளில் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிதம்பரத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
அருணாச்சல பிரதேச மாநில விவகாரத்தில் அரசியல் சாசனத்தின்படி பெரும்பான்மை பலம் பெற்ற ஒருவரை ஆட்சி அமைக்க மாநில ஆளுநர் அழைக்கிறார்.
பின்னர் அந்த அரசில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் விலகியதால் பெரும்பான்மையை இழந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமைகிறது. ஆனால் அது தவறு என தற்போது நீதிமன்றம் கூறி உள்ளது.
இது பெரும்பான்மையை இழந்து விட்ட ஒரு முதல்– அமைச்சரை மீண்டும் முதல்–அமைச்சர் ஆவதற்கு வசதி செய்து கொடுத்தது போல் உள்ளது. இதனால் சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் பெரும்பான்மை இல்லாமல் போய், குதிரை பேரம் நடப்பதற்கு வழி வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும். நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உள்நோக்கம்தான் கற்பிக்கக் கூடாது. ஆனால் தீர்ப்பை விமர்சிக்கலாம்.
இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குறை கூறி இருப்பது ஏற்புடையதல்ல. எமர்ஜென்சியை காங்கிரஸ் கொண்டு வந்தபோது நாடாளுமன்றத்தையோ, அமைச்சரவையையோ காங்கிரஸ் கலந்து ஆலோசிக்க வில்லை. 3 பேர் சேர்ந்து கையெழுத்திட்டதில் என்ன ஜனநாயகம் காக்கப்பட்டது.
ஆட்சியில் இருந்தபோது எண்ணற்ற மாநில அரசுகளை காங்கிரஸ் அரசு கலைத்தது. ஜனநாயகத்திற்கும் காங்கிரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராகுல்காந்தி பொறுப்போடு பேச வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா கட்சி தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் அருகே தியாகவல்லிபுரம் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது குளக்கரையில் ஒரு அம்மன் சிலை, ஒரு பெருமாள் சிலை, தட்சிணாமூர்த்தி சிலைகள் கிடந்தன.
இதைபார்த்த சிறுவர்கள் தியாகவல்லி ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் மோகன சுந்தரம் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிராம நிர்வாக அதிகாரி லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வருவாய் துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாமி சிலைகளை மீட்டு கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட சாமிசிலை கருங்கல்லால் ஆனது ஆகும். இந்த சிலையில் சில பகுதிகள் சேதமடைந்து உள்ளன. போலீசாருக்கு பயந்து சிலைகளை கொள்ளையர்கள் குளக்கரையில் விட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பண்ருட்டி கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் நடந்து 5 வருடங்கள் கழித்து சம்மன் வந்தபிறகு தான் என்மீது வழக்குப்பதிவு செய்தது தெரியும். அதனால் சட்டத்தை மதித்து இன்று நான் கோர்ட்டில் ஆஜரானேன்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு காவல் துறையை குற்றம் சாட்டுவதை விட ஆட்சியில் இருப்பவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் காவல்துறையை செயல்பட விடாமல் வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 1 லட்சத்து 21 ஆயிரம் போலீசாரே பணியில் உள்ளனர்.
20 ஆயிரம் போலீசாரை தேர்வு செய்து பணி அமர்த்தாமல் உள்ளனர். அவர்களை உடனே பணி அமர்த்த வேண்டும். காவல் துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக உள்ளனர்.
அவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.
முல்லை பெரியாறு பிரச்சனைக்கு முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இன்னமும் இந்த பிரச்சனை முடியவில்லை.
மேற்கண்டவாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.






