என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாசமாக வளர்த்த நாயை கொன்றதால் கர்ப்பிணி பெண் தற்கொலை: மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டு பலி
    X

    பாசமாக வளர்த்த நாயை கொன்றதால் கர்ப்பிணி பெண் தற்கொலை: மனமுடைந்த கணவனும் தூக்குப்போட்டு பலி

    பாசமாக வளர்த்த நாயை கணவன் கொன்றதால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். மனமுடைந்த நிலையில் கணவனும் தூக்குப்போட்டு பலியானார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த புதுக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30), விவசாயி. இவருடைய மனைவி வேம்பு (20).

    இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போது வேம்பு 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். வேம்பு தனது வீட்டில் செல்லமாக நாயை வளர்த்து வந்தார்.

    இது கோவிந்தராஜுக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக வேம்புவை அவர் கண்டித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவிந்தராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிபோதையில் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது வேம்புவுக்கும், அவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், நாயை எட்டி உதைத்தார். அந்த நாய் கீழே சுருண்டு விழுந்து இறந்தது. பின்னர் கோவிந்தராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.

    பாசமாக வளர்த்த நாயை கணவர் கொன்று விட்டதால் வேம்பு மனமுடைந்தார். கண்ணீர் விட்டு கதறினார். பின்னர் வீட்டின் மாடிக்கு சென்றார். அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாலையில் கோவிந்தராஜ் வீடு திரும்பினார். மாடிக்குச் சென்ற அவர் மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    தூக்கில் இருந்து அவரை கீழே இறக்கி கட்டிலில் படுக்க வைத்தார். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் கதறி துடித்தார். இனி நாம் வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்தார்.

    பின்னர் கோவிந்தராஜ் மனைவி தூக்குப்போட்ட அதே கயிற்றில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ், வேம்பு தம்பதியரின் உடல்களை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமான 2 ஆண்டுகளில் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×