என் மலர்
உள்ளூர் செய்திகள்

`எம்புரான்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள்: தமிழக விவசாயிகள் கண்டனம்
- அணையினால் ஏற்படும் ஆபத்து மக்களை காவு வாங்க காத்திருக்கிறது.
- தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கூடலூர்:
கேரளாவின் பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் கடந்த 27ந் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தில் நெடும்பள்ளி டேம் என்ற பெயரில் முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறான கருத்து தெரிவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், எம்புரான் திரைப்படத்தில் கதாநாயகி மஞ்சுவாரியர் ஒரு காட்சியில் பேசும்போது நாம் பிறப்பதற்கு எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பிரிட்டீஸ் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ராஜாக்களில் ஒருவர் சாம்ராஜ்ய பக்தி என்ற பெயரில் கையெழுத்து போட்டு 999 வருட ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்டது நெடும்பள்ளி டேம். ராஜாக்களும் ஆக்கிரமிப்பு சக்திகளும் நாட்டை விட்டு சென்ற பின்பும் ஜனநாயகத்தின் பெயரில் இன்றும் நம்மை ஆக்கிரமித்து உள்ளனர்.
இந்த டேமால் வரக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசி இருப்பார். இது பெரியாறு அணை குறித்தே பேசப்படுகிறது என்பதால் கண்டிக்கத்தக்கது.
கேரளாவில் நடக்கும் இத்தகைய கேடுகெட்ட அரசியல் பெரியாறு அணையை பலிகிடாவாக ஆக்குவது கண்டிக்கத்தக்கது. அணையினால் ஏற்படும் ஆபத்து மக்களை காவு வாங்க காத்திருக்கிறது.
அணையை காப்பாற்ற செக்டேம் என்னும் சுவர்களால் பயன் இல்லை. அணையே இல்லாமல் இருப்பதே சரி என்ற வசனமும் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இதன் தயாரிப்பாளர்களை கண்டிக்கிறோம்.
இந்த வசனங்களை திரைப்படத்தில் இருந்து நீக்க வேண்டும். 2 ஷட்ட ர்களை திறந்தாலே மக்களை பழிவாங்குகிற அணையை குண்டு வைத்து தகர்த்தால் கேரளம் மறுபடியும் தண்ணீரில் மூழ்கும் என்றும் வசனம் இடம் பெற்றுள்ளது.
படத்தின் மொத்த களத்தையும் அடித்து நொறுக்குகின்ற வசனங்கள் பெரியாறு அணை மீது அவதூறு மற்றும் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஒரு திரைப்படமாக பல்வேறு வகையில் வரவேற்பை பெற்ற நிலையில் கதை களத்திற்கு பொருத்தம் இல்லாத வகையில் முல்லைப்பெரியாறு அணை மீது இனவெறியை வெளிப்படுத்தியிருப்பது இரு மாநில உறவில் பாதிப்பு ஏற்படுத்துவதாக அமைக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்றார்.






