என் மலர்
உள்ளூர் செய்திகள்

எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம்
- ஒரே இடத்தில் இரண்டு திட்டம் எதற்கு.மக்கள் வரிப்பணம் தானே வீணாகிறது.
- இனி வருங்காலங்களில் இன்னும் போக்குவரத்து அதிகமாக தானே செய்யும்.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் கடந்த 23 ந்தேதி பூமி பூஜை நடைபெற்றது. இதற்கிடையே ஏற்கனவே நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், கண்டன ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை நடைபெற்ற போது பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கண்களில் கருப்பு கொடி கட்டி அந்த இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பல்லடம் நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அந்தப்பகுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:- நவீன எரிவாயு தகனமேடை திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. குடியிருப்பு அருகே அமைக்க வேண்டாம் என்று தான் கூறுகிறோம். மேலும் ஏற்கனவே ரோட்டரி சங்கம் மூலம் சுமார் 4 கோடி ரூபாயில் வெங்கிட்டாபுரம் பகுதியில் மின் மயானம் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் இரண்டு திட்டம் எதற்கு. மக்கள் வரிப்பணம் தானே வீணாகிறது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இந்தப் பகுதிக்கு வருவதற்கு அந்த வழியாகத்தான் வரவேண்டும். தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில் இனி வருங்காலங்களில் இன்னும் போக்குவரத்து அதிகமாக தானே செய்யும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பகுதிக்கு உடலை கொண்டு வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? மேலும் அரசு என்பது மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான். இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை சூழ்ச்சி மூலம் பிரித்தாளுகின்றனர். மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்களை இனி மேல் கடை நடத்த முடியாது என மிரட்டுகின்றனர். ஆட்டோ ஓட்டுபவர்களை அழைத்து ஆட்டோ நிறுத்த அனுமதி மறுக்கப்படும், பொய் வழக்கு போடப்படும். இப்படி பல்வேறு வழிகளில் பொது மக்களை மிரட்டுகின்றனர்.
நாங்கள் தொடர்ந்து போராட உள்ளோம். அடுத்ததாக உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளோம். அதற்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






