search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் சிதறிய இளநீர் காய்களால் சொகுசு பஸ்  உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்
    X

    சாலையில் சிதறிக் கிடந்த இளநீர் காய்களை அப்புறப்படுத்தி ஓரமாக வைத்துள்ள போலீசார்

    சாலையில் சிதறிய இளநீர் காய்களால் சொகுசு பஸ் உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்

    சாலையில் சிதறிய இளநீர் காய்களால் சொகுசு பஸ் உள்பட 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று இரவு பொள்ளாச்சியில் இருந்து 2 ஆயிரம் இளநீர் காய்கள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த 2 ஆயிரம் இளநீர் காய்களும் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இளநீர் ஏற்றி வந்த விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் மாதவன் படுகாயம் அடைந்தார்.

    அப்போது பெருந்துறையில் இருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்த சிமெண்ட் டேங்கர் லாரி, விபத்து நடந்த பகுதியில் இளநீர்காய்கள் சிதறி கிடந்ததால், அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஏழுமலை சிமெண்ட் லாரியை அங்கு நிறுத்தினார். அந்த பகுதியில் மின் வெளிச்சம் இல்லை.

    இதனால் பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் , சிமெண்ட் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சொகுசு பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். சொகுசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த லாரி டிரைவர்கள் மாதவன், ஏழுமலை ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து சாலையில் சிதறிக் கிடந்த இளநீர் மற்றும் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×