என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பரபரப்பு டிரைவரை கடத்தி பணம் பறித்த கும்பல்
- இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் வண்டியை மறித்து நிறுத்தினர்.
- 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
தென்காசி மாவட்டம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவஞானகுமார் (வயது 26). ஓசூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் வாகன பரிசோதனை ஓட்டுநராக உள்ளார். இவர் ஒரு வாகனத்தை பரிசோதனை செய்வதற்காக ஓட்டி சென்றார்.
ஓசூர் சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகே அவர் சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் வண்டியை மறித்து நிறுத்தினர். சிவஞானகுமாரை கீழே இறக்கிய அந்த ஆசாமிகள் பணம் கேட்டு மிரட்டினர்.
ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்று அவர் சொன்னதால் ஊருக்கு போன் மூலம் பேசி அவரது செல்போனுக்கு ரூ.10,000 பணம் போட்டுவிட சொல்லியுள்ளனர். அதன்படி சிவஞானகுமாரின் உறவினர் ரூ.10,000 அனுப்பியுள்ளார்.
இதையடுத்து சிவஞானகுமாரை அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றிற்கு அழைத்து சென்று அந்த கடையின் உரிமையாளரது எண்ணுக்கு ரூ.9ஆயிரத்து 200 பணத்தை ஜி -பே மூலம் அனுப்ப சொல்லி அந்த பணத்தை பெற்றுள்ளனர்.
பின்னர் மதுக்கடைக்கு அழைத்து சென்று மீதம் உள்ள பணத்தில் மது அருந்திவிட்டு சிவஞானகுமாரை விட்டுவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் சிவஞானகுமார் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் விசாரனை நடத்திய போலீசார் செல்போன் பண பரிவர்த்தனை மூலம் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்த வருண் (வயது 21),மோனிஷ் (24), பூபதி,மாலிக் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் வருண்,மோனிஷ் இருவரையும் கைது செய்தனர்.






