என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கிராம மக்கள்.
திண்டுக்கல் அருகே கோவில் கட்ட வசூலித்த பணத்தில் முறைகேடு
- பொதுமக்கள் வழங்கும் பணத்துக்கு ரசீது இல்லாமல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர்கள் மோசடி செய்துள்ளனர்.
- எனவே பொதுமக்களை மிரட்டி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள யாகப்பன்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜான்பீட்டர் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அவர்கள் தெரிவிக்கையில், யாகப்பன்பட்டியில் பொதுமக்களிடம் வரி வசூல் செய்து அந்தோணியார் கோவில் கட்டி வருகிறோம். பொதுமக்கள் வழங்கும் பணத்துக்கு ரசீது இல்லாமல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த சேசுராஜ், கென்னடி, ஆரோக்கியசாமி, ஞானராஜ், விமல் ஆகியோர் மோசடி செய்துள்ளனர்.
ரூ.1 லட்சம் வரை மக்களிடம் வசூல் செய்த பணத்தை கணக்கில் காட்டவில்லை. மேலும் ஊர் திருவிழா அன்னதானத்தில் ஏலம் விடப்பட்ட மளிகை பொருட்களுக்கான தொகை ரூ.52 ஆயிரத்தையும் கணக்கில் காட்டாமல் கையாடல் செய்து விட்டனர்.
இது குறித்து நாங்கள் கேட்டபோது, வெளியூரைச் சேர்ந்த கூலிப்படையினரை வைத்து எங்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். கோவில் கட்டுமானம் தொடர்பாக ஊர் கூட்டம் நடத்த வலியுறுத்தினாலும் அவர்கள் வராமல் உள்ளனர். மேலும் எங்கள் அனுமதி இல்லாமல் ஊர் கூட்டம் நடத்தினால் யாரும் உயிருடன் செல்ல மாட்டீர்கள் என மிரட்டுகின்றனர்.
17 இடங்களில் நாங்கள் வைத்திருந்த சி.சி.டி.வி. கேமராக்களை அபகரித்து விட்டனர். இது போன்ற முறைகேடுகள் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. எனவே பொதுமக்களை மிரட்டி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் தங்கள் புகாரையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்து சென்றனர்.






