search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்
    X

    போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார்.

    கல்லூரி மாணவர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

    • கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும்.
    • அந்த பகுதியில் மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்லூரி அமைக்கப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 8 வருடங்களாக அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

    இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த கல்லூரிக்கு நிரந்தர இடத்தை தேர்வு செய்து கல்லூரி கட்டிட பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடந்து.

    நன்னிலம் தொகுதியில் உள்ள குடவாசல் கல்லூரிக்கு வேறு ஒரு தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அந்த இடத்திற்கு குடவாசலில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

    மேலும் கல்லூரிக்கு தேவையான இடத்தை குடவாசல் பகுதியில் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று குடவாசல் பேருந்து நிலையத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தரையில் அமர்ந்து தொடர்ந்து 2வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நன்னிலம் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் மாணவ- மாணவிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    அப்போது நிருபர்க ளிடம் காமராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது, குடவாசலிலே கல்லூரி அமைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்நிலையிலும் இந்த மாணவ மாணவிகளுக்கு ஆதரவாக இருப்பேன்.

    சட்டமன்றத்தில் இதைப் பற்றி பேசிய பொழுது, அந்தப் பகுதியில் மக்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரி அமைக்கப்படும் என உயர்க்கல்வி அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

    குடவாசலிலேயே கல்லூரி அமைய வேண்டும் என்று இப்பகுதி மக்களும், கல்லூரி மாணவர்களும் போராடிவரும் நிலையில் வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்வின் போது அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், ராஜேந்திரன், நகர செயலாளர் சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் தென்கோவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×