என் மலர்
உள்ளூர் செய்திகள்

போதக்காடு பகுதியில் தார்சாலை அமைக்க தருமபுரி கலெக்டர் சாந்தி ஆய்வு செய்த போது எடுத்த படம்.
ஏற்காடு மலை கிராமங்களுக்கு இணைப்பு தார் சாலை அமைக்க கலெக்டர் ஆய்வு
- பாதை அமைக்க வேண்டிய போதக் காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தருமபுரி மாவட்ட எல்லை வரை தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.
- பாப்பிரெட்டிப் பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி, உண்டு உறைவிட பள்ளி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி களையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள அஜ்ஜம்பட்டி, போதக்காடு, புதூர், பையர்நத்தம், பி.பள்ளிப்பட்டி போன்ற பகுதிகளில் மலைவாழ் மக்கள் பெருமளவு வசித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் உள்ள பெரிய காடு, அனார்காடு, வெள்ளக்கடை, மற்றும் மலைப் பகுதியில் உள்ள எஸ்டேட்டுகளுக்கு தினமும் கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த எஸ்டேட் பகுதிக்கு வேலைக்கு வாகனத்தின் மூலமாக செல்லும் நிலையில் போதுமான சாலை வசதி இல்லாததால் மாற்று பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணனிடம் மலை கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஒன்றிய செயலாளர் சரவணன் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உத்தர விட்டார்.
அதன் பேரில் மாவட்ட கலெக்டர் சாந்தி பாதை அமைக்க வேண்டிய போதக்காடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தருமபுரி மாவட்ட எல்லை வரை தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.
பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி, உண்டு உறைவிட பள்ளி மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது தி.மு.க பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.






