என் மலர்
உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
வாழப்பாடியில் உழவர் சந்தைக்கு தேர்வான இடத்தை கலெக்டர் ஆய்வு
- வாழப்பாடி பேரூராட்சி, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
- அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார்கள், பல்வேறு வகையான பூக்கள் ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக, வாழப்பாடியில் உழவர்சந்தை அமைக்க வேண்டும்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பேரூராட்சி, 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது. சுற்றுப்புற கிராம மக்கள் விவசாய விளை பொருட்களை விற்பனை செய்யவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்லவும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனர்.
வாழப்பாடி பகுதி கிராமங்களில் விளைவிக்கப்படும் தக்காளி, தேங்காய் உள்ளிட்ட அனைத்து ரக காய்கறிகள், வாழைத்தார்கள், பல்வேறு வகையான பூக்கள் ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக, வாழப்பாடியில் உழவர்சந்தை அமைக்க வேண்டும் என வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், நுகர்வோர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனை மற்றும் வணி கத்துறை வாழப்பாடியில் உழவர் சந்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களும் வந்து செல்வதற்கு ஏற்ப பொருத்தமான இடத்தை தேர்வு செய்து உழவர் சந்தை அமைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். வாழப்பாடி கடலுார் சாலையில் தனியார் பள்ளிக்கு அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் உழவர் சந்தை அமைக்க திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார்.
வாழப்பாடி பகுதியில் அதிகம் விளைக்கூடிய தக்காளி, வாழை, தேங்காய் மற்றும் கருமந்துறையில் விவசாயிகளால் விளைவிக்கப்படும் முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை வாழப்பாடியில் அமைய உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனை செய்யலாம். இதனால் தனியார் மொத்த காய்கறி சந்தை விலையை விட, உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு 20 சதவீதம் அதிக விலையும், நுகர்வோர்களுக்கு தனியார் காய்கறிக்கடைகளை விட 15 சதவீதம் விலை குறைவாகவும் கிடைக்கும்.
உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு , விளை நிலத்தின் கணினி பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம், மார்பளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை உரிய விண்ணப்பத்துடன் இணைத்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 4-ம் தளம் அறை எண் 404–-ல் செயல்படும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி அடையாள அட்டை யினை பெறலாம் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கோட்டாட்சியர் (பொ) சரவணன், வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், வேளாண்மை அட்மா குழு தலைவர் சக்கரவர்த்தி, வருவாய் ஆய்வாளர் கார்த்திக், வி.ஏ.ஓ. பெரிய சாமி மற்றும் வேளாண் வணிகத்துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உடனிருந்தனர்.






